இன்று கல்பனா சாவ்லா நினைவு தினம்
வேலுசாமி (Author) Published Date : Feb 01, 2018 15:13 ISTWorld News
இந்தியா
இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா, 1961-ஆம் ஆண்டு ஜூலை1-ஆம் தேதி இந்தியாவின் ஹரியானாவில் உள்ள கர்னல் என்ற ஊரில் பிறந்தார். இவர் தனது கல்வி படிப்பை கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் தொடங்கினார். பின்னர் 1982-ஆம் ஆண்டு, சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வானியல் (Aeronautic) துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இதனை அடுத்து அதே வருடம் இவர் அமெரிக்கா சென்றுள்ளார்.டெக்சஸ் கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் 1984-ம் ஆண்டு முதுகலைப்பட்டத்தை பெற்றார்.
பின்னர் கொலராடோ பல்கலைக்கழகத்தில் 1986-ஆம் ஆண்டு இரண்டாம் முதுகலைப் பட்டமும், 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியலின் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவரின் முதல் விண்வெளி பயணம் 1996-ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. இவருடைய முதல் விண்வெளி பயணம் கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87-இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவராக இவர் தேர்வானார். 1997-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் நாள் விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். இதன் மூலம் விண்வெளிக்கு சென்ற முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையை சாவ்லா பெற்றார்.
இந்த பயணத்தில் 10 மில்லியனுக்கு அதிகமான கிலோமீட்டர், 15 நாள்கள், 12 மணிநேரம் என இந்தப் பூமியை 252 முறை சுற்றியுள்ளார். பின்னர் அதே கொலம்பிய விண்வெளி ஊர்தியில் 2003-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ஆம் தேதி கல்பனா சாவ்லா உள்பட 7 பேர் கொண்ட குழு விண்வெளிக்கு புறப்பட்டது. தனது ஆராய்ச்சி பணியை முடித்து விட்டு பிப்ரவரி 1-ஆம் தேதி திரும்பிய போது விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தரையிறங்குவதற்கு 16 நிமிடங்களுக்கு முன்பு விண்கலம் வெடித்து சிதறியது.
இந்த சம்பவத்தில் கல்பனா சாவ்லா உட்பட 7 பேரும் மரணமடைந்துள்ளனர். இதனை அடுத்து அவருடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் கல்பனா சாவ்லா உடல் அமெரிக்காவில் உள்ள தேசிய பூங்காவில் அடக்கம் செய்யப்பட்டது. இன்று கல்பனா சாவ்லாவின் 15-ம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் கல்பனா சாவ்லா மற்றும் அவருடன் இறந்த 6 பேருக்கும் நினைவு அஞ்சலி செலுத்தி வருகிறது.