ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது
வேலுசாமி (Author) Published Date : Nov 02, 2017 11:00 ISTWorld News
இந்தியா
தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் கட்டடம் சிற்ப கலைகளுக்கு எடுத்துக்காட்டுகளாக தமிழகத்தில் ஏராளாமான கோவில்களும் சிற்பங்களும் நிறைந்திருக்கின்றன. தமிழரின் சிற்ப கலைகளின் திறமையை கண்டு பல்வேறு நாட்டிலுள்ள பக்தர்கள் மற்றும் சமூக அமைப்பினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தமிழரின் கட்டட கலைகளுள் ஒன்றாக விளங்கும் ஸ்ரீரங்க ரங்கநாதர் கோவில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இந்த ஆலயம் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது. 7 பிரகாரங்கள், 21 கோபுரங்கள், 54 சன்னதிகள் கொண்ட பிரமாண்டமான இக்கோவில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும் ஸ்ரீரங்கத்தின் முக்கிய வீதிகள் ரங்கநாதர் கோவிலுக்குள் அமைந்துள்ளது.திருப்பணிகள் செய்து கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் இரண்டு கட்டமாக கும்பாபிஷேகம் நடந்தது.
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் வழிபாட்டில் உள்ள பழமையான இக்கோவிலில் நடந்த திருப்பணிகள் குறித்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு யுனெஸ்கோ அமைப்பு சார்பில் 9 வல்லுனர்கள் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது. இக்குழு தனது ஆய்வறிக்கை முடிவு குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது. அதில் பழமை மாறாமல் திருப்பணிகள் நடத்தி, புராதன சிறப்பை பாதுகாத்தமைக்கு சிறப்பு விருது(யுனஸ்கோ) வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவிலின் இணை ஆணையர் ஜெயராமன் கூறுகையில், அரசு மற்றும் அறங்காவலர் குழுத்தலைவர் வேணு சீனிவாசன் வழிகாட்டுதலோடு நடந்த இத்திருப்பணிகளுக்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம் இது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் இந்த விருது பெறும் முதல் கோவில் இதுதான். அறிவிக்கப்பட்ட விருதை யுனெஸ்கோ அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் விரைவில் நேரில் வந்து வழங்குவார்கள் என்று தெரிவித்தார்.
‘யுனெஸ்கோ’ விருது அறிவிக்கப்பட்ட தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மாலை கோவில் வாசலில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.