தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீரிலிருந்து 177 டிஎம்சியாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
வேலுசாமி (Author) Published Date : Feb 16, 2018 15:10 ISTPolitics News
இந்தியா
காவிரி நதி நீருக்காக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நடந்து வருகிறது. கர்நாடக அரசு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட மறுப்பதால் தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பாசன பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது.
இந்த காவிரி நீர் பிரச்சினைக்காக சென்னை மற்றும் மைசூர் மாகாணங்களுக்கு இடையே 1892-ஆம் ஆண்டு முதன் முதலில் ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் 1924-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரி நதி நீர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 'நடுவர் மன்றம்' கொண்டு வரப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பாசன பகுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் 1991-ஆம் ஆண்டு இடைக்கால தீர்ப்பு வழங்கினர். இதன் பிறகு 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி 'நடுவர் மன்றம்' தனது இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. இதில் கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு 10 மாத கால இடைவெளியில் 192 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
ஆனால் இதனை எதிர்த்து தமிழகம் சார்பில் கூடுதலாக 72 டி.எம்.சி. தண்ணீர் வேண்டும் எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ‘அப்பீல்’ செய்யப்பட்டது. மேலும் கர்நாடகா அரசும் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்படும் நீரை 132 டிஎம்சியாக குறைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்தியது. இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலமும் தங்களுக்கும் கூடுதலாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி கோரிக்கைகளை முன்வைத்தது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.
இதில் நான்கு மாநிலங்களும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தது. மேலும் நீர்வள நிபுணர்களின் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது. இதற்கு இடையில் ஒரே மாதத்தில் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் அமித்தவராய், கான்வில்கர் ஆகியோரை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இதன் பிறகு கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு விசாரணை முடிவுற்றது. ஆனால் தீர்ப்பு தேதி வெளியிடாமல் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஒத்தி வைத்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட 150 நாட்களுக்கு பிறகு இன்று தீர்ப்பு விளக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. அதன்படி இன்று காலை 10:30 மணிக்கு நீதிபதி தீர்ப்பினை வெளியிட்டார். இதில் "எந்த மாநிலமும் காவிரி நதியை உரிமை கொண்டாட முடியாது.
அது எந்த மாநிலத்திற்கும் சொந்தமானது அல்ல. இதனால் காவிரி நீரை மாநிலங்கள் சமமாக பிரித்து கொள்ள வேண்டும். தற்போது தமிழ்நாட்டின் நிலத்தடி நீர்மட்டம் 20 டிஎம்சியாக உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு 177.25 டிஎம்சி நதிநீர் காவிரியிலிருந்து ஒதுக்கபடுகிறது. இந்த நீரை 10 மாத இடைவெளியில் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டும். கர்நாடகா மாநிலத்திற்கு 184.75 டிஎம்சி நீர் ஒதுக்கப்படுகிறது.
புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரும், கேரளாவிற்கு 30 டிஎம்சி நீரும் திறந்து விட வேண்டும். மேலும் குடிநீர் பயன்பாட்டிற்காக சம முக்கியத்துவம் அளிக்க பட வேண்டும். அதன்படி பெங்களூரின் குடிநீர் தேவைக்காக கூடுதலாக நீர் ஒதுக்கப்படுகிறது. பெங்களூரு நகரின் குடிநீருக்கு 4.75 டிஎம்சி நீரை கர்நாடகாவிற்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 14.75 டிஎம்சி நீரில் இருந்து பயன்படுத்தி கொள்ளலாம்.
தமிழ்நாடு கூடுதலாக காவிரி பாசன படுகையில் இருந்து 10 டிஎம்சி நீரை எடுத்து கொள்ளலாம். இதன் மூலமாக தமிழ்நாட்டிற்கு மொத்தமாக 20 டிஎம்சி நிலத்தடி நீர் கிடைக்கும். மேலும் கர்நாடகா மாநிலத்திற்கு நிலத்தடி நீர் மட்டத்தை கருத்தில் கொண்டும்,பெங்களூரு நகரில் பெருகி வரும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் காவிரி நீரின் ஒதுக்கீடு அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நடுவர் மன்றம் 192 டிஎம்சி ஒதுக்கி இருந்தது. அது 177.250 டிஎம்சியாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த காவிரி நதிநீர் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நீடிக்கும். மேலும் காவிரி நதிநீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். இந்த காவிரி நதிநீர் தொடர்பான அனைத்து வழக்குகளும் இன்றுடன் முடித்து வைக்கப்படுகிறது. இந்த இறுதி தீர்ப்பை எதிர்த்து எந்த மாநிலமும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. இதனை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்." என்று அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டிற்கு 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் 264 டிஎம்சி நீரை திறக்க கோரி வாதங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் 200 டிஎம்சி கூட கிடைக்காமல் 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கியுள்ளது தமிழ்நாட்டிற்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் பிரமுகர்கள் பலர் இந்த தீர்ப்பை எதிர்த்து கடும் வாதங்களை முன்வைக்கின்றனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மக்களையும் முக்கியமாக காவிரி டெல்டா பாசன பகுதிகளை சேர்ந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.