நான்காவது முறையாக உலக கோப்பையை வென்ற இந்தியா
வேலுசாமி (Author) Published Date : Feb 03, 2018 15:34 ISTWorld News
Sports News
12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வந்தது. 19 வயத்துக்குட்பட்டோர் மட்டும் ஆடும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்றது. இதன் அரை இறுதி போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியாவும், ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் இறுதி போட்டியில் களமிறங்கியது. கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இந்த போட்டி மவுண்ட் மாங்கானாவில் காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. மொத்தம் 47.2 ஓவரில் 216 ரன்களை எடுத்து ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட் ஆனது.
இதில் அதிகபட்சமாக மெர்லோ என்பவர் 76 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனை அடுத்து 217 ரன்கள் எடுத்தால் கோப்பை என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பிரித்வி ஷா, மன்ஜோத் கல்ரா ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி 4 ஓவரில் 23 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை வந்ததால் ஆட்டத்தில் தடை ஏற்பட்டது. பின்னர் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 50 ரன்களை 8.5 ஓவரில் கடந்தது. அதன் பிறகு 12 வது ஓவரை சதர்லோண்டு வீச 5வது பந்தில் கேப்டன் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார்.
இவர் 41 பந்தில் 29 ரன்களை எடுத்து ஆட்டமிழந்துள்ளார். பின்னர் களமிறங்கிய ஷீப்மான் கில் மன்ஜோதுடன் ஜோடி சேர்ந்து 15 வது ஓவரில் 100 ரன்களை கடந்தனர். இதனை அடுத்து ஷீப்மான் கில் 21 வது ஓவரில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் விக்கெட் கீப்பரான ஹர்விக் தேசாய் களமிறங்கினார். இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி 38 வது ஓவரில் 220 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிபெற செய்தனர்.
இதில் அவுட் ஆகாமல் ஆடி தொடக்க வீரராக களமிறங்கிய மன்ஜோத் கல்ரா 102 பந்தில் 101 ரன்களை எடுத்து அபார சதம் அடித்துள்ளார். இவர் 102 பந்துகளில் 8 பவுண்டரியும் 3 சிக்ஸரையும் விளாசியுள்ளார். கீப்பரான ஹர்விக் தேசாய் 61 பந்தில் 47 ரன்களும் 5 பவுண்டரியும் அடித்துள்ளனர். இறுதியாக இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது. இந்திய அணியின் இந்த அபார வெற்றியின் மூலம் நான்காவது முறையாக உலக கோப்பையை தட்டி சென்றது. இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட்டை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.