நிதி மந்திரி அருணஜெட்லீ தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் விவரம்
வேலுசாமி (Author) Published Date : Feb 01, 2018 17:16 ISTPolitics News
இந்தியா
நாட்டின் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லீ இன்று பாராளுமன்றத்தில் 2018-2019 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
மருத்துவம்:
புதியதாக இலவச மருத்துவ வசதி திட்டத்தின் மூலம் சுகாதாரத்துறைக்கு 1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய மருத்துவத்திற்கான நிதி ஒதுக்கீடு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் 50 கோடி பேர் பயனடைவர். ஆண்டுக்கு 5 லட்சம் மதிப்பிலான இலவச சிகிச்சைகள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும். 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் மூலம் வழங்கப்படும்.
காசநோயாளிகளுக்கு மாதம் 500 ரூபாயை சிகிச்சைக்காக வழங்குவதற்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் என்ற திட்டத்தின் மூலம் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 24 மாவட்ட அளவிலான மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தி, மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளாக மாற்றப்படும். மூன்று நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு மருத்துவ கல்லூரி வீதம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பழங்குடியினரின் கல்வி:
ஏகலைவா என்ற தனித்திட்டம் பழங்குடியினரின் குழந்தைகளுக்கான கல்விக்காக தொடங்கப்படும். பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கங்கை நதி தூய்மைப்படுத்த படும். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடி வீடுகள் கட்டப்படும். 16 ஆயிரம் கோடி ரூபாய் ஏழை, எளிய குடும்பங்களுக்கு மின் வசதி வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 39,135 கோடி பழங்குடியினருக்கான சமூக பொருளாதார பாதுகாப்புக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 56.619 கோடியில் 279 திட்டங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்படும்.
கடன் திட்டம்:
76 சதவீத பெண்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட கடனில் தரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது 3 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டு பயிற்சி 50 லட்சம் இளைஞர்களுக்கு அளிக்கப்படும். அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அதிக முக்கியத்துவம் தந்து வருகிறது. இதன் மூலம் 70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
75 ஆயிரம் கோடி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க திட்டம் செய்யப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு திட்டம் வயதான பெண்களுக்காக செயல்படுத்தப்படும். மேலும் சமூக பாதுகாப்புத் திட்டம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்காகவும் செயல்படுத்தப்படும். கிட்டத்தட்ட 99 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், ஆளுநர் ஊதியம்:
குடியரசு தலைவரின் மாத ஊதியம் 1.50 லட்சமாக தற்போது உள்ளது, இது 5 லட்சமாக உயர்த்தப்படும். துணை குடியரசு தலைவரின் மாத ஊதியம் 1.25 லட்சமாக தற்போது உள்ளது, இது 4 லட்சமாக உயர்த்தப்படும். மாநில ஆளுநர்களின் மாத ஊதியம் 1.10 லட்சமாக தற்போது உள்ளது. இது 3.50 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை உறுப்பினர்களின் ஊதியத்தை ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாற்ற குழு ஏற்படுத்தப்படும். இந்த ஊதியம் விலைவாசி உயர்வு உள்பட பல அம்சங்களுக்கு ஏற்ப மாற்றி அறிவிக்கப்படும். மேலும் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அதில் எந்த மாற்றமும் இல்லாமல் 2.50 லட்சமாக தற்போதைய நிலையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறை:
ரயில்வே துறைக்கென்று தனி பட்ஜெட் இல்லாத போது, தற்போது பொதுபட்ஜெட்டில் அந்த 1.48 லட்சம் கோடி ரயில்வே துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆளில்லா லெவல் கிராஸிங்கில் (Level Crossing) 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்படுவர். ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தும் பணிகள் மேம்படுத்தப்படும். ரயில் தண்டவாளங்களின் பராமரிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இரட்டை ரயில் பாதைகள்18 ஆயிரம் கிலோமீட்டருக்கு அமைக்க தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடைமேடைகளுக்கு பதிலாக 25 ஆயிரம் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படும். பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் நவீன ரயில்பெட்டி தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும்.
அனைத்து ரயில் நிலையங்களிலும் வைபை (Wi-Fi) வசதி ஏற்படுத்தப்படும். மேலும் ரயில் பாதைகள் 3,600 கிலோ மீட்டர் தொலைவுக்கு சீரமைக்கப்படும். 4 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு 2019-ஆம் ஆண்டு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். பெங்களூரில் 17 ஆயிரம் கோடி செலவில் புறநகர் ரெயில் சேவை ஏற்படுத்தப்படும். பனிமூட்டத்தால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க சிறப்பு கருவிகள் அமைத்து தரப்படும். மும்பை ரயில்வே வசதிகளுக்கு 11000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு துறை:
மொத்தமாக பாதுகாப்பு துறைகளுக்கான நிதி எப்பவும் கனிசமாக ஒதுக்கப்படும். 2.74 லட்சம் கோடி கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. இதில் 86 ஆயிரம் கோடி ரூபாய் ஆயுதம் மற்றும் ராணுவ தளவாடங்கள் போன்றவைகளுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த ஆண்டில் பாதுகாப்பு துறைக்கான நிதி 2.94 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது. இந்த நிதி கடந்த ஆண்டை விட 7.6% அதிகமாகும். ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களுக்கு மட்டும் இந்த முறை 93 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
எல்லையில் அதிகரித்து வரும் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மற்றும் சீனா போன்ற வல்லரசு நாடுகளை சமாளிக்கும் விதமாக பாதுகாப்பு துறையை மேம்படுத்துவதற்காக அதிநவீன ஆயுதங்கள் வாங்கப்பட வேண்டும் என பாதுகாப்புதுறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நாட்டினுடைய பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக சர்வதேச எல்லைகளில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும்.
சாலைகள், வேலைவாய்ப்பு மற்றும் பாசன வசதி :
அரசு சாலைகளை மேம்படுத்துவதில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. நகரங்களுக்கு அம்ருத் திட்டத்தின் கீழ் நீர் விநியோகிக்க 77,640 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 6 கோடி கழிவறைகள் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ளது. தற்போது அரசு 2 கோடி புதிய கழிவறைகளை கட்ட திட்டமிட்டுள்ளது. வேளாண் உற்பத்தி நிறுவனத்திற்கு ஐந்து வருடங்களுக்கு 100 % வரிவிலக்கு அளிக்கப்படும். 51 லட்சம் புதிய வீடுகள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் கட்டித்தரப்படும். கிராமப்புற வேலைவாய்ப்புகள் மற்றும் நீர்ப்பாசன மேம்பாட்டுக்கு 14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நான்கு கோடி கிராமப்புற வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும். 13 லட்சம் ஆசிரியர்களுக்கு கல்வியின் தரத்தை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படும். நவோதயா பள்ளிகளின் தரத்திற்கு இணையாக பழங்குடியின பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்படும். 1000 பி.டெக் (B.Tech) மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பி.எச்டி (P.hD) படிக்க உதவி செய்யப்படும். 1.5 லட்சம் சுகாதார மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும். முறையான கல்வியை பழங்குடியின மாணவர்களுக்கு வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிலத்தடி நீர் வசதி பாசன வசதியில்லாத 96 மாவட்டங்களுக்கு ஏற்படுத்தி தர 2,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் அருண் ஜெட்லீ 11 மணிக்கு தாக்கல் செய்தார். இந்த உரையை முடித்தும் பத்திரிகையாளர் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதனை அடுத்து பட்ஜெட் குறித்த பொதுமக்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று இரவு பதிலளிக்க உள்ளார். இன்று இரவு 7 மணிக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் பொதுமக்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.