இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர் என்ற பட்டத்தை பெற்ற 10வயது சிறுவன்
வேலுசாமி (Author) Published Date : May 01, 2018 18:01 ISTEducation News
பிறக்கும் குழந்தைகள் எவரும் அறிவாளியாகவோ, முட்டாளாகவோ பிறப்பதில்லை. அறிவும், புத்திசாலித்தனமும் குழந்தைகளுக்கு பெற்றோர்களின் வளர்ப்பிற்கேற்ப மாறி விடுகிறது. குழந்தைகள் மத்தியில் அறிவாளி, முட்டாள் என்ற பாகுபாடு கிடையாது. குழந்தைகளின் சிறு வயது கனவு வளர வளர அவர்களின் வருங்கால நோக்கமாக மாறி விடும். இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் ஆர்வங்களை கூர்ந்து கவனித்து அதனை மேம்படுத்த குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும். சிறு வயதில் அவர்களுக்கு இருக்கும் ஆசை தான் குறுகிய காலங்களில் அவர்களை சாதிக்க தூண்டுகிறது.
அந்த வகையில் தற்போது மும்பையை சேர்ந்த 10வயது சிறுவன் இளம் புத்தக ஆசிரியர் என்ற பட்டத்தை பெற்றுள்ளான். மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகரத்தை சேர்ந்த அயான் கபாடியா என்று 10வயது சிறுவன் பரேல் என்ற இடத்தில உள்ள ஜேபிசிஎன் சர்வதேச பள்ளியில் (JBCN International School) நான்காம் வகுப்பு பயின்று வருகிறான். இவனுக்கு சிறு வயதில் இருந்தே கதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது. இதனால் சிறு வயதில் இருந்தே அவன் கதைகளை எழுத தொடங்கினான். இவன் சமீபத்தில் எழுதிய கதை ஒன்றினை அவனது பெற்றோர்கள் சிறுவனை ஊக்கப்படுத்தும் விதமாக புத்தகமாக வெளியிட்டனர்.
இந்த புத்தகம் தற்போது மிகுந்த வரவேற்பினை பெற்று சிறுவர்களை கவர்ந்து வருகிறது. இதன் மூலம் சிறு வயதில் புத்தக ஆசிரியர் என்ற பெருமையை பெற்ற சிறுவன் அயன் கபாடியா, இந்திய சாதனையாளர் புத்தகத்திலும் இவனது பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த கதையை 3 நாட்களில் எழுதி முடித்தால் மிக குறுகிய காலத்தில் எழுதப்பட்ட கதை என்ற பட்டமும், இளம் புத்தக ஆசிரியருக்கான பட்டமும் சிறுவன் அயன் கபாடியாவுக்கு வழங்கப்பட்டு சான்றிதழும் அளிக்கப்பட்டது. சிறு வயதில் சாதனையாளராக மாறிய இந்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும் குழந்தைகள் சாதனையாளர்களாக மாற, குழந்தைகளுக்கு நண்பர்கள், உறவினர்கள், அதிகாரிகள் எவரும் தேவை இல்லை, பெற்றோர்கள் ஆதரவு அளித்தால் போதும். ஒவ்வொரு குழந்தைகளும் சாதனையாளர் தான்.