கேந்திரியா வித்யாலயா பள்ளியின் முதல்வர் அனந்தனை சாமர்த்தியமாக சுற்றிவளைத்த சிபிஐ
வேலுசாமி (Author) Published Date : Apr 10, 2018 13:08 ISTEducation News
கேந்திரியா வித்யாலயா என்ற சிபிஎஸ்இ கல்வி நிறுவனமானது புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் 1963-ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 55 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டும் 1094 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் காத்மன்ட், மாஸ்க்கோ, டெஹ்ரான் போன்ற அயல்நாட்டிலும் மூன்று பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
அதிக கிளைகளை கொண்டு செயல்பட்டு வரும் பள்ளிகளில் முதன்மையானதாக கருதப்படும் இந்நிறுவனத்தின் கிளை ஒன்று சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் முதல்வர் பொறுப்பில் இ.அனந்தன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது சிபிஐ அதிகாரிகள் இ.அனந்தனை கைது செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை தொடங்கியது. இணைதளத்தில் முதல் வகுப்பு சேர்க்கைக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வந்தனர்.
இந்நிலையில் பள்ளி முதல்வர் அனந்தன், தலித் மாணவனின் முதல் வகுப்பு சேர்க்கைக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதன் பிறகு மாணவனின் பெற்றோர்கள், அனந்தன் லஞ்சம் வாங்குவது குறித்து சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சிபிஐ அதிகாரிகளும், மாணவனின் பெற்றோரும் லஞ்சம் வாங்கும் போது அனந்தனை கையும் களவுமாக பிடிக்க வேண்டுமென்று திட்டம் தீட்டியுள்ளனர். பின்னர் தலித் மாணவனின் பெற்றோர்கள் அனந்தனின் வீட்டில் ஒரு லட்சம் லஞ்சம் கொடுத்த போது சிபிஐ அதிகாரிகள் அவரை சுற்றி வளைத்துள்ளனர். இதன் பிறகு கையும் களவுமாக மாட்டிய அனந்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.