பெண்களுக்கான பாலியல் தொல்லையை கட்டுப்படுத்த மெக்சிகோ மாணவர்கள் உருவாக்கிய தற்காப்பு கருவி
மோகன்ராஜ் (Author) Published Date : Aug 17, 2018 17:47 ISTEducation News
மெக்சிகோ நாட்டில் நான்கு மாணவர்கள் இணைந்து பெண்களுக்கு நேரும் பாலியல் தொல்லையை தடுக்கவும், திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதமாக மின்சார கருவியை கண்டுபிடித்துள்ளனர். ஆடைகளில் பொருந்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவியை பெண்கள் உபயோகிப்பதன் மூலம் அவரை தொடும் நபர் எவராக இருந்தாலும் அவர் மீது மின்சாரம் தாக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
எங்களது நகரில் அதிகரித்து வரும் பாலியல் தொல்லைகளை கட்டுப்படுத்த இந்த முயற்சியை மேற்கொண்டதாக அந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான முன்மாதிரியை வடிவமைத்து அதில் வெற்றி கண்டுள்ளனர். மெக்கட்ரானிக்ஸ் பொறியியல் மாணவர்களான அனைத் பர்ரா குரோஸ் (Anaid Parra Quiroz), எஸ்தல கோமஸ் (Esthela Gómez), ரோபாட்டிக்ஸ் துறையை சேர்ந்த மாணவர் (Giwan Park) மற்றும் சட்ட துறை மாணவர் குடலப் மார்டின்ஸ் (Guadalupe Martínez) ஆகியோர் இணைந்து பெண்கள் பாதுகாப்பிற்கான மின்சார கருவியை வடிவமைத்துள்ளனர்.
இவர்கள் தற்போது பியூபெல்லா வளாகத்தில் (Puebla campus) உள்ள மான்டெர்ரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Monterrey Institute of Technology) என்ற கல்லூரியில் பயின்று வருகின்றனர். மேலும் பியூப்ளா (Puebla) மாநிலத்தில் ஒரு நாளைக்கு மட்டும் மூன்று பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்த மின்சார கருவி வேலை செய்யும் விதம் :ஒரு காட்டன் ஆடையில் 9வோல்ட் பேட்டரி, மின்மாற்றி (Transformer) மற்றும் கேபிள்ஸ் (cables) போன்றவற்றின் மூலம் உருவான இந்த கருவி இணைத்து பொருத்தப்பட்டுள்ளது. ரோபோடிக்ஸ் மாணவரான கிவன் பார்க் (Giwan Park) என்பவர் இந்த சுற்றை (Circuit) வடிவமைத்துள்ளார். இந்த கருவி தயாராக உள்ளதை தெரிவிக்கும் விதமாக LED லைட் பொருத்தப்பட்டுள்ளது. பிறகு ஆடையில் கொடுக்கப்பட்டுள்ள பட்டனை அழுத்தினால் ஆடையை தொடும் நபர் மின்சாரத்தால் பாதிப்படைவார்.
இதனால் ஆடையை அணிந்துள்ள நபருக்கு எந்த ஆபத்தும் நேராது. பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சூழ்நிலையில் இந்த ஆடையை அணிந்துள்ள பெண்ணை தொடும் நபருக்கு மின்சாரம் தாக்கப்படும். மின்சாரம் தாக்கப்பட்டு அவர் துடிக்கும் சமயத்தில் பெண்கள் தங்களை காப்பாற்றி கொள்ளலாம் அல்லது பாதுகாப்பான இடத்திற்கு ஓடி விடலாம். மேலும் இதனை கண்டுபிடித்த மாணவர்கள், இது ஒரு ஆயுதமல்ல, தற்காப்பு கருவி மட்டுமே. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த மின்சார கருவியின் விலை :பெண்கள் பாதுகாப்பிற்கு உதவும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மின்சார கருவியை உருவாக்குவதற்கு மூன்று மாதங்கள் தேவைப்பட்டுள்ளது. தற்போது கைகளில் மட்டும் பொருத்தும் விதமாக இதனை உருவாக்கியுள்ளனர். இந்த கருவியில் சென்சார் மற்றும் சில எலக்ட்ரோட்களை (Electrode) சேர்க்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தவிர இந்த கருவியை சட்டையில் மட்டுமல்லாமல் வெவ்வேறு ஆடைகளிலும் பொருத்தப்படும் விதமாக உருவாக்க உள்ளனர். இதனை 50 டாலருக்கு விற்க உள்ளனர். இந்திய மதிப்பில் 3500 ரூபாய்க்கு விற்கவுள்ளனர்.