Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இரண்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு வீட்டு பாடம் கொடுக்க கூடாது

முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு எட்டு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சூழலில் பள்ளி மாணவர்கள் கல்வியை தங்கள் மீது ஏறி நிற்கும் சுமையாக பார்க்கின்றனர். அதற்கு காரணம் அதிகப்படியான வீட்டு பாடமும், அதிகப்படியான கற்பித்தலுமே காரணம். பள்ளி மாணவர்களை காணும் போது முதுகில் 10 கிலோ எடை புத்தகங்களை சுமந்து செல்கின்றனர். பள்ளி பருவத்தில் குழந்தைகளுக்கு அதிகப்படியான விளையாட்டும், குறைந்த கல்வியும் இருக்க வேண்டும். ஆனால் தற்போது அதிகப்படியான கல்வி மட்டுமே இருக்கிறது. விளையாட்டு என்பது இருப்பதே இல்லை.

வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி மாணவர்களை படி படி என்று வற்புறுத்தி படிக்க வைக்கும் போது அவர்களுக்கு கல்வி முறையாக சென்றடைவதில்லை. தற்போதுள்ள 1-12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் மனப்பாடம் செய்தே கல்வியை கற்கின்றனர். எவரும் நடைமுறையில் எப்படி நடக்கின்றன என்பதை புரிந்து கொண்டு கற்பதில்லை. சில தனியார் பள்ளிகளில் முதல் வகுப்பு குழந்தைகளுக்கே எட்டு பாடங்களை கற்பிக்கின்றனர்.

அதிகப்படியான பாடங்களை குழந்தைகள் கற்கும் போது அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. தற்போதுள்ள பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு கல்வியை கற்பிப்பதில்லை. கல்விக்காக அதிகபடியான பணங்களை செலவழித்து விட்டோம் என்ற போக்கில் தான் பெற்றோர்கள் குழந்தைகளை படி படி என வறுபுறுத்துகின்றனர். இதனால் கல்வி மாணவர்களிடம் அரைகுறை அறிவாகவே சென்றடைகிறது என்பது எந்த பெற்றோருக்கும் புரிவதில்லை.

இந்தியாவில் இயங்கி வரும் பள்ளிகளில் சிபிஎஸ்சி (Central Board of Secondary Education - CBSE) பள்ளிகளில் 11 மாநிலங்கள் முதல் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை என்சிஇஆர்டி (National Council of Educational Research and Training - NCERT) பாடத்திட்டங்களை பின்பற்றி வருகிறது. இந்தியா முழுவதும் 18000 சிபிஎஸ்இ பள்ளிகள் இதனை பின்பற்றி வருகின்றன. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) பாடத்திட்டத்தின் படி முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு மூன்று பாடங்களை மட்டுமே கற்பிக்க வேண்டும்.

ஆனால் சிபிஎஸ்இ பாடத்தை பின்பற்றும் சில தனியார் பள்ளிகள் முதல் இரண்டாம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு எட்டு பாடங்களை கற்பிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் புருசோத்தமன் என்பவர் புகார் மனு அளித்திருந்தார். அந்த மனுவில் "என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை பின்பற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று பாடங்களை மட்டுமே கற்பிக்கின்றன. ஆனால் சிபிஎஸ்இ பாடத்தை பின்பற்றும் சில தனியார் பள்ளிகள் மாறாக எட்டு பாடங்களை கற்பிக்கின்றன.

இதனால் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் குழந்தைகள் 7 கிலோ வரை எடை கொண்ட புத்தகங்களை முதுகில் சுமந்து செல்கின்றனர். இதனால் சிபிஎஸ்இ பள்ளிகள் என்சிஇஆர்டி பரிந்துரைக்கும் புத்தகங்களை மட்டும் பயன்படுத்த உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிட்டது. இதன் பின்னர்  என்சிஇஆர்டி செயலாளர் ஹரிஷ் குமார் என்பவர் அளித்த பதிலில் "சிறந்த ஆசிரியர்களை கொண்டு கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் நாங்கள் தரமான புத்தகங்களை வடிவமைத்து வருகிறோம்.

ஒரு குழந்தைக்கு எவ்வளவு நேரம் கற்பிக்க வேண்டும், எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்பதை கொண்டு தான் வரையறுக்க படுகிறது. எந்த குழந்தைக்கும் கல்வி என்பது மன அழுத்தத்தையும், பாகுபாடையும் ஏற்படுத்த கூடாது. முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்க கூடாது. 3-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு மணி நேரம் மட்டுமே வீட்டு பாடம் கொடுக்க வேண்டும். 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தினம் ஒரு மணி நேரம் என்ற கணக்கில் வாரத்திற்கு 6 மணி நேரமும், 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினம் இரண்டு மணி நேரம் வீதம் வாரத்திற்கு 12 மணி நேரம் வரை மட்டுமே வீட்டு பாடம் கொடுக்க வேண்டும் என முன்னதாகவே பள்ளிகளுக்கு என்சிஇஆர்டி வலியுறுத்தியுள்ளது.

என்சிஇஆர்டி எப்போதும் அதிகப்படியான பாடங்களை கற்பிக்க துணை நின்றதில்லை. முதல், இரண்டு வகுப்பு மாணவர்களுக்கு தாய்மொழி, கணக்கு போன்ற இரண்டு பாடங்களையும் 3-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தாய்மொழி, கணிதம், சூழ்நிலையியல் மற்றும் பொது அறிவு போன்ற பாடங்களை கற்பிக்க வேண்டும். முக்கியமாக மாணவர்களை எந்த சூழலிலும் புத்தகங்களை கண்டிப்பாக வாங்க வேண்டும் என வற்புறுத்த கூடாது.

இது தொடர்பாக பெற்றோர்களிடமும் பேச வேண்டும். வாழ்க்கைக்கு தேவையான பாடங்கள் அந்தந்த வயதில் மட்டுமே கற்பிக்க வேண்டும். இது தவிர்த்து அதிகப்படியான சுமைகளை மாணவர்களுக்கு கொடுக்கும் போது மனப்பாடம் மட்டுமே செய்கின்றனர். மாணவர்களுக்கு ஒரு போதும் கல்வி மன அழுத்தத்தை தந்துவிட கூடாது என்பதை கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்" என அந்த  பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு வீட்டு பாடம் கொடுக்க கூடாது