தொழிற்சாலைகளால் நாடு முழுவதும் 275 ஆறுகள் மாசு
புருசோத்தமன் (Author) Published Date : Dec 27, 2017 12:20 ISTHealth News
வளர்ந்து வரும் நாகரிகத்திலும், தொழிற்சாலைகளாலும் ஆறுகள் மற்றும் சுற்று புற சுகாதாரங்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றன. தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவு நீர், வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர் போன்றவை முறையாக கவனிக்கப்படாமல் ஆற்றில் கலந்து மாசடைந்து வருகிறது. இதனால் மக்களுக்கு பல்வேறு வகையான நோய்கள் தாக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளால் 7 முக்கிய நதிகள் மாசடைந்துள்ளதாக அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் விடுத்துள்ள அறிக்கையில் பவானி, காவிரி, தாமிரபரணி, மணிமுத்தாறு, பாலாறு, சரபங்கா, வசிஷ்டா நதி போன்ற முக்கிய நதிகள் மாசடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தொழிற்சாலை கழிவுகள், வீட்டு கழிவுகள் போன்ற காரணிகளால் நாடு முழுவதும் 275 ஆறுகள் மாசடைந்துள்ளதாக தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த ஆறுகளில் இருந்து குடிநீர் தேவை, விவசாயம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு தண்ணீர் விநியோகிக்க பட்டு வருகிறது. இதுபோன்ற நிலைமை நீடித்தால் என்னவாகும் என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. விரைவில் இதற்கான தீர்வை அரசு எடுக்கவேண்டும் வலியுறுத்தி வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.