ஜார்கண்டில் தடுப்பூசி போடப்பட்ட 4 குழந்தைகள் பலி 5 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பு
ராசு (Author) Published Date : Apr 09, 2018 17:05 ISTஇந்தியா
தட்டம்மை, டிஃப்தீரியா, பெர்டுஸிஸ் ,டெட்டானஸ் உள்ளிட்ட நோய்க்ளைத் தடுப்பதற்காக ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டம் லோயங்கா கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. எவரும் எதிர்பாராத விதமாக ஒரு மணி நேரத்திற்குள் 3 குழந்தைகள் இறந்தன. மேலும் 6 குழந்தைகளுக்கும் உடல்நிலை மோசமடைந்ததால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி மற்றொரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் பலி எண்ணிக்கை 4-ஆகா உயர்ந்தது. அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள் தடுப்பூசி போட வந்த ஒரு செவிலியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விஷயம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் குழு, ஆரம்ப நிலையில் எதுவும் கூறவியலாது என்றும் சம்பவத்தின் பின்னணி என்ன என்று விசாரித்த பின்னரே உறுதியாக சொல்ல இயலுமென்றும் பதிலளித்தது. தொகுதி MLA வான ராதாகிருஷ்ணனிடம் இது பற்றி கேட்டபோது, விசாரணைக்குழு அமைக்கப்பட்டு சம்பத்தப்பட்ட அதிகாரிகளின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படுமென்று அம்மாநில முதல்வர் ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு நேர்ந்த இந்த துயர் சம்பவத்தால் அந்த வட்டார மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேபோலவே, கடந்த பிப்ரவரி மாதம் பெங்களுருவில் உள்ள மண்டியாவில் 2 பச்சிளம் குழந்தைகள் தடுப்பூசி செலுத்தியவுடன் இறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்துவரும் இத்தகைய சம்பவங்களால் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. மத்திய மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் இதில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று மக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.