பிரமோஸ் ஏவுகணையின் பரிசோதனை வெற்றிக்கு பிரதமர், ராணுவ மந்திரி பாராட்டு
ராசு (Author) Published Date : Nov 23, 2017 20:27 ISTஇந்தியா
பிரமோஸ் (BRAHMOS) சூப்பர்சோனிக் ஏவுகணையானது இந்தியா மற்றும் ரஸ்யாவின் கூட்டு அமைப்பு. இந்த 'பிரமோஸ்' என்ற கூட்டு சொல்லானது பிரம்மபுத்திரா மற்றும் மாஸ்க்கோவா என்ற நதிகளின் பெயர்களில் இருந்து உருவாக்கப்பட்டது. இது இரண்டு டன் எடை கொண்டது. 200 கிலோ வெடிபொருள் உள்ளடக்கி சுமார் 290 கி.மீ வரை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கு பாதையில் இருந்து 20 கி.மீ வரை திசை மாறி சென்று தாக்கும். இந்த பிரமோஸ் ஏவுகணையை 2001-ஆம் ஆண்டு முதன் முதலாக பரிசோதிக்கப்பட்டது.
பின்னர் 2003-ஆம் ஆண்டு கடலில் இருந்து விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. மேலும் பலமுறை ஒடிசா மாநிலம் பலசோறில் உள்ள சாந்தினி ஏவுதளத்தில் இருந்து பரிசோதிக்கப்பட்டது. இதுவரை தரை மற்றும் கடலில் இருந்து பரிசோதிக்கப்பட்ட இந்த பிரமோஸ் ஏவுகணை நேற்று முதன் முதலாக வானில் இருந்து பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனையை சுக்கோய் Sukhoi-30MKI ரக போர் விமானம் மூலம் பரிசோதிக்க பட்டது. இந்த பரிசோதனையானது வெற்றிகரமாக அமைந்ததாகவும் வங்காள விரிகுடா அருகே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அளித்ததாகவும் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த பரிசோதனையின் வெற்றிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் "சுக்கோய் போர் விமானம் மூலம் பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிக்கு பங்காற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்." என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தனது சமூக வலைத்தளத்தில் "பிரமோஸ் ஏவுகணையின் சோதனை உலக சாதனை படைத்திருக்கிறது. இந்த சாதனையை நிகழ்த்திட்ட ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் மற்றும் இந்த பிரமோஸ் ஏவுகணையை உருவாக்கிய குழுவினர் அனைவர்க்கும் பாராட்டுக்கள்." என தெரிவித்துள்ளார்.