பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் குழந்தை அழுததற்காக வெளியேற்றப்பட்ட இந்திய குடும்பத்தினர்
வேலுசாமி (Author) Published Date : Aug 09, 2018 12:56 ISTஇந்தியா
கடந்த 23ஆம் தேதி லண்டனில் இருந்து பெர்லின் நகரை நோக்கி புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இருந்து குழந்தை அழுந்ததற்காக இந்தியர்கள் குடும்பத்தினரை இறக்கி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொறியியல் சேவை அதிகாரி ஒருவர் தனது மனைவி மற்றும் மகனுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் கடந்த 23ஆம் தேதி பயணித்துள்ளார். மூன்று வயதான தனது மகனை தனி இருக்கையில் அமர வைத்து சீட் பெல்ட் அணிந்துள்ளார்.
ஆனால் குழந்தை அந்த இருக்கையில் சரிவர அமர முடியாமல் அழ துவங்கியுள்ளது. குழந்தை விடாது அழுது கொண்டு இருந்ததால் அவரது மனைவியும், பின் இருக்கையில் அமர்ந்திருந்த இந்தியர் குடும்பமும் குழந்தையின் அழுகையை நிறுத்த முயற்சி செய்து வந்தனர். அப்போது வந்த விமான ஊழியர் ஒருவர் குழந்தையை அதட்டி அமைதியாக உட்காருமாறு தெரிவித்துள்ளார்.
ஊழியர் சத்தம் போட குழந்தை இன்னும் சத்தமாக அழ துவங்கியது. குழந்தையின் அழுகை பிடிக்காமல் அங்கு வந்த மற்றொரு ஊழியர் ஒருவர் விமானத்தை திரும்பும்படி தெரிவித்து இந்திய பொறியியல் அதிகாரி குடும்பத்தையும், குழந்தையின் அழுகையை நிறுத்த முயன்ற மற்றொரு இந்தியர் குடும்பத்தையும் இறக்கி விட்டுள்ளது. மேலும் அந்த விமான ஊழியர் இந்தியர் குடும்பத்தினரிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், இன வெறியில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிப்புக்குள்ளான இந்திய பொறியில் அதிகாரி, இந்த விவகாரம் குறித்து இந்திய விமான போக்குவரத்து அதிகாரி சுரேஷ் பிரபுவிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் சார்பில் கூறுகையில் "இந்த புகார் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இந்த புகார் குறித்து சம்பந்தப்பட்ட ஊழியர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.