நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து - மாற்று இடம் தரக்கோரி ஜெம் லெபாரட்டரி மனு
வேலுசாமி (Author) Published Date : May 10, 2018 11:02 ISTஇந்தியா
கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒப்புதல் அளித்தது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இதனை தவிர்த்து மத்திய அரசு தொடர்ந்து ஹைட்ரொ கார்பன் திட்டத்தை செயல்படுத்தி வந்தது. இதனால் ஜெம் லெபாரட்டரி என்ற நிறுவனத்துடன் கடந்த மார்ச் மாதம் 27-ஆம் தேதி ஒப்பந்தம் செய்தது. ஆனால் மத்திய அரசு இயற்கை எரிவாயு கழகத்திற்கு (ஒய்என்ஜிசி) நிறுவனத்திற்கு அளித்த குத்தகையை ஜெம் நிறுவனத்திற்கு மாற்றவில்லை.
இந்த திட்டத்தினை எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த திட்டத்தை ஜெம் நிறுவனம் கைவிட தயாராகி வருகிறது. இது குறித்து ஜெம் நிறுவனம் மத்திய அரசுக்கு இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெம் நிறுவன முதுநிலை அதிகாரி ஹரிபிரசாத், "நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்க தாமதமாகி வருவதால் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான பணிகளை மேற்கொள்வதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம்.
இதனால் மாற்று இடம் தரக்கோரி மத்திய எரிவாயு மற்றும் பெட்ரோலிய துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மொத்தமாக 67 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் பிறகு நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் 2016 பிப்ரவரி 17இல் அறிவிக்கப்பட்டது. திட்டம் அறிவித்த அடுத்த நாளே அப்பகுதியில் இந்த திட்டத்தினை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இதன் பிறகு தமிழக அரசு இந்த திட்டம் கைவிடப்படும் என்று 22 நாட்கள் நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு உறுதி அளித்தது.
தமிழக அரசு அளித்த உறுதியின் பேரில் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க 28 நிறுவனங்களுடன் மார்ச் 27இல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் தமிழகம் முழுவதுமுள்ள ஏராளாமான மக்கள் ஒன்று திரண்டு நெடுவாசலில் தொடர்ந்து 172 நாட்கள் போராட்டத்தினை நடத்தினர். இதனை அடுத்து இந்த திட்டத்தை எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தில் விஷால் சார்பில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பிறகு தற்போது ஜெம் நிறுவனம் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த திட்டம் கைவிடப்பட்டதற்கு போராடிய அனைவருக்கும் நடிகர் விஷால் தனது டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.