1000 உயிர்களை பறித்த ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவம் நிகழ்ந்த நாள் இன்று
வேலுசாமி (Author) Published Date : Apr 13, 2018 11:59 ISTஇந்தியா
ஜாலியன்வாலா பாக் படுகொலையை பற்றி நாம் ஒவ்வொருவரும் பாடபுத்தகத்தின் மூலமாக அறிந்திருப்போம். நம் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த ஒவ்வொரு வீரரையும் மறந்து விட கூடாது என்பதற்காக தான் நம் பள்ளிப்பருவத்திலிருந்தே அவர்களை பற்றி பயின்று வருகிறோம். ஆனால் நம்மில் பலர் அவர்களை பயிற்சியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையாக தான் பார்க்கிறோம்.
அவர்கள் விடையல்ல நம் விடுதலைக்காக போராடி உயிர் துறந்த விடுதலை புலிகள். அவர்கள் போராடாமல் விட்டிருந்தால் என்னவாயிருக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது. இதில் ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவம் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை எடுத்தது. இதை பற்றி அறிவோம்,
ஜாலியன்வாலா பாக் படுகொலை அல்லது அமிர்தசரஸ் படுகொலை, வட இந்தியாவில் அமிர்தசரஸ் என்று இடத்தில் 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி (இன்று) ரெஜினல்ட் டையர் என்ற கொடூர ராணுவ அதிகாரி தலைமையில் பிரிட்டானிய ராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட மோசமான பீரங்கி சூட்டை குறிக்கிறது. 10 நிமிடங்கள் நீடித்த இந்த துப்பாக்கி சூட்டில் மொத்தம் 1650 குண்டுகள் சுடப்பட்டன. பிரித்தானிய அரச கணக்கீட்டின் படி இந்த துப்பாக்கி சூட்டில் மொத்தம் 379 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனாலும் தனியார்களின் தகவல்களின் படி கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த சூட்டில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் காந்தியடிகளால் அமைக்கப்பட்ட இந்தியக் குழுவின் கணக்கெடுப்பின்படி ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் பின்னணி, பால கங்காதர திலகர், அன்னி பெசன்ட் ஆகியோர் தலைமையில் உருவான சுதேசி (ஹோம்ரூல்) இயக்கம், மகாத்மா காந்தி தலைமையிலான போராட்டங்கள் என இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் போராட்டங்கள் பிரிட்டானிய அரசுக்கு எதிராக வலுத்தது. இதற்காக 1919-ஆண்டில் மார்ச் 1-ஆம் தேதி அன்று சத்தியாக்கிரக நடவடிக்கை துவங்கியது.
பிரிட்டானிய ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரக இயக்கத்தை பிரட்டிஷ் பேரரசுக்கு வந்துள்ள பேராபத்து என கருதினார்கள். மேலும் மக்களிடையே வெகுவாக பரவி வளர்ந்து வரும் போராட்ட எழுச்சியைஆரம்பத்திலேயே நசுக்கிவிட பிரிட்டானிய அரசு முடிவு செய்தது. இதற்காக சிட்னி ரௌலட் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், வங்காளம் ஆகிய பகுதிகளில், ஜெர்மனி மற்றும் போல்ஷெவிக் தொடர்புகள் பற்றி இக்குழு ஆராய்ந்தது. இதனடிப்படையில் ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், அனுமதியின்றி சிறையிலிடவும் காவல் துறையினருக்கு இச்சட்டம் வழிவகுத்தது.
அரசுக்கு எதிரான ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் பெருகி வந்தது. 1919 மார்ச் 29, ஜாலியன் வாலாபாக் இடத்தில் பெரும் மக்கள் கூட்டம் திரண்டது. மார்ச் 30 அன்று பெரும் கடையடைப்பு நடத்த முன்னேற்பாடுகளும் நடந்தன. பொதுமக்கள் தங்களுடைய உரிமைக்காக இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இது ஆட்சியாளருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மக்களிடையே எழுச்சியும் எதிர்ப்பும் வேகமாயின. பல்வேறு ஊர்வலங்கள் கண்டன எதிர்ப்புக் கூட்டங்கள், ரௌலட் சட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகள் என பரவலாக வளர்ந்து கொண்டே வந்தது. இந்த போராட்டங்களின் உச்சகட்டம் தான் ஜாலியன்வாலா பாக் படுகொலை.
நமது தேசத்தில் மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக தான் நம் முன்னோர்கள் போராடினார்கள். ஆனால் தற்போது மக்கள் வாழ்வதற்காகவே ஒவ்வொரு நாளும் போராடி வருகின்றனர். திரும்பும் திசையெல்லாம் போராட்டம். அன்று வெள்ளைக்காரனை எதிர்த்து போராடிய நம் முன்னோர்கள், இன்று அரசியல் தலைவர்களையும், அரசாங்கத்தையும் எதிர்த்து போராடும் பொது மக்கள், இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
நாட்டிற்குள் தகுதியற்ற அரசியல் தலைவர்களால் கண்ணீர் விடும் அப்பாவி பொதுமக்கள், மக்களை கவனிக்க மறுக்கும் அரசாங்கம், காவல் துறை, எதற்காக விடுதலை வாங்கி தந்தார்கள் என்பதை மறந்த இந்தியர்கள், இப்படி பல செயல்கள் சுதந்திர போராட்ட தியாகிகளின் வீரத்தையும், நாம் வாழ நமது நாட்டு எல்லையை பாதுகாக்கும் ராணுவம் மற்றும் காவல் அதிகாரிகளை கொச்சை படுத்துகிறது.