கரூர் ரச்சந்தர் திருமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு சிறப்பு பார்வை
வேலுசாமி (Author) Published Date : Jan 19, 2018 11:49 ISTஇந்தியா
ஜல்லிக்கட்டு அல்லது மஞ்சு விரட்டு என்பது தமிழர்களின் மரபுவழி பண்பாடுகளுள் ஒன்றாகும். பங்கேற்கும் காளைகளை ஒவ்வொன்றாக ஓட விட்டு வீரர்கள் அதன் திமிலை அல்லது கொம்பை பிடித்து அடக்குவது இந்த விளையாட்டின் முக்கிய அம்சமாகும். தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படும் இந்த விளையாட்டு தமிழ்நாடு முழுவதும் தை மாதத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டானது ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதமாக அடக்குகின்றனர். வேலி ஜல்லிக்கட்டு, வாடிவாசல் ஜல்லிக்கட்டு, வடம் ஜல்லிக்கட்டு முதலியன.
வேலி ஜல்லிக்கட்டு - இந்த விளையாட்டில் ஒரு மைதானத்தில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.
வாடிவாசல் ஜல்லிக்கட்டு - மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் சென்று காளைகளை வீழ்த்துகின்றனர்.
வடம் ஜல்லிக்கட்டு - வட தமிழகத்தில் வடம் ஜல்லிக்கட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.
தமிழர்களின் வீர விளையாட்டுகளுள் ஒன்றாக கருதப்படும் இந்த ஜல்லிக்கட்டு கடந்த இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டது. இதனை எதிர்த்து ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நிரந்தரமாக நீக்க கோரி கடந்த வருடம் ஜனவரி 18-இல் மாபெரும் புரட்சி போராட்டம் வெடித்தது. இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் நாட்டின் பல்வேறு இடங்களிலும், தமிழர்கள் வாழும் பல்வேறு வெளிநாடுகளிலும் நடைபெற்றது. மேலும் பல்வேறு இடங்களில் உள்ள பலர் சென்னை மெரினா கடற்கரையில் ஒன்று திரண்டு நாட்டையே அதிர வைத்தனர். இதனை அடுத்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டதை அடுத்து அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தால் அனைத்து மக்களின் கவனமும் காளைகள், மாடுகள் பக்கம் திரும்பியது. இதன்மூலம் அன்றாடம் கடைகளில் வாங்கும் பாக்கெட் பால், தயிர் முதலியன தவிர்த்து ஏராளமான வீடுகளில் மாடுகளை சொந்தமாக வாங்க ஆர்மபித்து பராமரிக்க பட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து ஏராளாமான மக்கள் மற்றும் இளைஞர்கள் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அங்கு காணப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. வாடிவாசல் வழியாக திறந்து விடப்பட்டு வரும் காளைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். காளைகளின் கொம்புகள் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இருக்க வேண்டும்.காளைகளுக்கு பூமாலையும், அதன் கால்களில் லாடம் ஏதும் அடித்திருக்க கூடாது போன்ற சில விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு, காளைகளை ஒருவர் மட்டுமே அடக்க வேண்டும், மீறி இரண்டு வீரர்கள் அடக்கினால் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இது போன்ற விதிமுறைகள் கடந்த ஆண்டு முறையாக பின்பற்றப்பட்டதால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு விமர்சியாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கடந்த பொங்கலன்று கரூரில் உள்ள ரச்சந்தர் திருமலை (RT Malai) என்ற இடத்தில் வாடிவாசல் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது. இது குறித்த சிறப்பு பார்வை,
1. இந்த ஜல்லிக்கட்டானது ஜனவரி 16-இல் நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டை தமிழ்நாட்டின் போக்குவரத்துதுறை அமைச்சரான எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் காலை 8 மணிக்கு தொடங்கி வைத்தார்.
2. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை வெகு விமர்சியாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் சுமார் 370 காளைகள் பங்குபெற்றது. ஜல்லிக்கட்டு நடைபெறும் முன் அனைத்து காளைகளையும் கால்நடை மருத்துவர்கள் முறையாக பரிசோதித்தனர்.
3. இந்த சோதனையில் பூமாலை, லாடம், காளைகளின் ஆரோக்கியம் போன்ற இன்னும் சில பரிசோதனைகள் பரிசோதிக்க பட்டது. மேலும் காளைகளுக்கு ஆல்கஹால் அல்லது ஏதாவது கரிம பொருள் ஏதும் சேர்க்கப்பட்டுள்ளதா என்றும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.
4. பரிசோதித்த காளைகளை அடையாளம் காண்பதற்கும் மறுபடியும் கலந்துகொள்வதை தவிர்ப்பதற்கும் காளைகளின் மீது பெயிண்ட் அல்லது எண்கள் முதலியன காணப்பட்டது.
5. இந்த சோதனைக்காக கால்நடை மருத்துவர்கள் காலை 6 மணிக்கெல்லாம் வந்து முறையாக பரிசோதித்து முறையான ஆவணங்களை கையாண்டு வீடு திரும்புவதற்கு இரவு 11 மணி ஆகிவிட்டது.
6. இந்த ஜல்லிக்கட்டில் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு வழங்கும் பரிசு பொருட்கள் விலை குறைந்ததாகவே காணப்பட்டாலும், தமிழர்களின் வீரத்தை நிரூபிக்கவும், கவுரவத்திற்காகவும் ஏராளமானோர் பங்கேற்று பரிசு பெற்றனர்.
7. இந்த ஜல்லிக்கட்டில் அடங்காத, அடக்கமுடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கு ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய ஒவ்வொரு வீரரின் ஊரிலும், பலர் அடக்க முடியாத இந்த காளையை இவன் அடக்கிவிட்டான் என்று பலர் பெருமையாக பேசுவர். அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்கள் ஊரில், தன காளையை எவராலும் அடக்கமுடியாத என்ற கவுரவமே பெரியது. இந்த பெருமையே பரிசு பொருட்களை விட விலை மதிக்கமுடியாத பரிசாக கருதுவார்கள்.
8.இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட வீரர்கள் அனைவரும் மாடுபிடி வீரர்கள் அல்லாது அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கணினி பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் எவ்வித பாகுபாடின்றி பங்குபெற்றனர்.
இந்த ஜல்லிக்கட்டில் கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகளாலும் முறையான பரிசோதனைகளாலும் உயிர் சேதம், காளைகளுக்கு ஏற்படும் காயங்கள் முதலியன தவிர்க்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் ஏற்படும் உயிர்சேதங்களால் ஜல்லிக்கட்டை தடை செய்யும் எண்ணம் ஏற்படும். இப்படி நாம் பின்பற்றும் விதிமுறைகளாலும், பராமரிப்பினாலும் வரும் காலங்களில் ஜல்லிக்கட்டை தடை செய்யும் எண்ணம் கண்டிப்பாக எழாது என்பது நிருபர்களின் கருத்து.