திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்த விபத்தில் பெண் ஒருவர் பலி
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 14, 2017 23:52 ISTஇந்தியா
திருச்செந்தூர் முருகன் கோவில், முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது வீடாக திகழ்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகின்றனர். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் பக்தர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக வருகின்றனர். பக்தர்கள் இந்த கோவிலை சுற்றிவருவதற்காக பிரகார மண்டபம் 1974-இல் கட்டப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த மண்டபத்தில் உணவு அருந்தவும், ஓய்வு எடுக்கவும் அமர்ந்திருப்பார்கள். இந்நிலையில் வள்ளி குகைக்கு அருகே உள்ள பிரகார மண்டபம் மேல்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் கட்டிட இடிபாட்டில் மக்கள் சிக்கியுள்ளனர். இதை கண்ட மக்கள் விரைந்து வந்து காவல் நிலையத்திற்கும் அருகிலுள்ள தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்க ஈடுபட்டுள்ளனர். அப்போது இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். இருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். பலியான பெண் திருச்செந்தூர் முத்தாரம்மன் தெருவை சேர்ந்த ரவி என்பவரின் மனைவி 45வயது பேச்சியம்மாள் என்பது தெரியவந்தது. உரிய முறையில் கட்டிடம் பராமரிக்கவில்லை என்றும் அவ்வப்போது கோவிலை பராமரித்திருக்க வேண்டும் என்று ஆலய பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை அடுத்து விரைந்து அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கோவிலின் வெளிப்பிரகாரம் முழுமையாக இடிக்கப்பட்டு புதியதாக கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்த பேச்சியம்மாள் குடும்பத்திற்கு 5 லட்சமும் காயமடைந்த 2 பேருக்கு 1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.