தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்
யசோதா (Author) Published Date : Jan 05, 2018 21:16 ISTஇந்தியா
13-வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக நேற்று சென்னையில் அமைச்சர் விஜய பாஸ்கருடன் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சு வார்த்தையில் மாலை 6 மணியை கடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போக்குவரத்துக்கு ஊழியர்கள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விடுமோ என்று கவலையாக இருந்தனர். இதனால் சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு ஊழியர்கள் பேருந்துகளை நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து பூந்தமல்லி, அய்யப்பன் தாங்கல் போன்ற பகுதிகளில் போராட்டங்கள் ஆரம்பித்தது.
இதனை தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு அமைச்சர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை அதிமுகவின் 30 கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களால் ஏற்று கொள்ளப்பட்டது. ஆனால் திமுகவை சேர்ந்த 13 தொழிற்சங்கம் ஏற்று கொள்ள மறுத்துவிட்டது. இதனை அடுத்து திமுக தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறி போராட்டங்களை 8 மணியளவில் கையில் எடுத்தனர்.
இதனால் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காமல் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஏராளாமான பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள், அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள் உள்ளிட்ட பெரும்பாலான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். வெளி ஊருக்கு செல்லும் பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதனை சாக்காக வைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் இதர தனியார் வாகனங்கள் கட்டணங்களை உயர்த்தியுள்ளனர்.