ஜல்லிக்கட்டை போன்று தமிழர்களின் உரிமைக்காக மீண்டும் ஒரு புரட்சி போராட்டம்
வேலுசாமி (Author) Published Date : Mar 31, 2018 18:28 ISTஇந்தியா
தற்போது தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம், நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு போராட்டம் மற்றும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை எதிர்ப்பு போராட்டம் போன்ற போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளனர். முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒன்று திரண்டு பீட்டாவை விரட்டி அடித்தது.
இது தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக தமிழர்கள் அனைவராலும் தற்போது வரை பேசப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து தற்போது தமிழரின் உரிமைக்காக நடத்தும் போராட்டங்கள் தீவிரமடைய தொடங்கியுள்ளது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் 45 நாட்களை கடந்து மத்திய, மாநில அரசுகள் கவனிக்காததால் இளைஞர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மெரினாவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். "நாங்கள் பிச்சை கேட்கவில்லை, எங்களின் உரிமையை தான் கேட்கிறோம்" என முழக்கங்களை எழுப்பினர். இவர்கள் தற்போது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் சமூக வலைத்தளங்களில் "இது நமக்கான போராட்டம்..மெரினாவில் தமிழர்கள் களமிறங்குவோம்" என பதிவு செய்து வருகின்றனர். முன்னதாக மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டம் தற்போது காவிரி மேலாண்மை வாரியம், நியூட்ரினோ எதிர்ப்பு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புகளுக்காக போராட்டம் நடைபெற உள்ளது. இதனால் மெரினாவில் ஏராளமான காவல் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.