ஒரு இந்திய குடிமகனாக ஆதார் மட்டும் இருந்தால் போதாது
விக்னேஷ் (Author) Published Date : Jul 23, 2018 17:05 ISTஇந்தியா
இந்தியா முழுவதும் மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை அனைத்து பொது துறைகளிலும் கட்டாயமாக்கப்பட்டு விட்டது. ஆதார் இருந்தால் தான் இந்திய குடிமகன் என்று மக்கள் நினைத்து கொண்டிருக்கையில் ஒரு இந்திய குடிமகனாக ஆதார் மட்டும் இருந்தால் போதாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் திவ்யா என்ற நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில், சட்ட விரோதமாக இந்தியா வந்துள்ளதாக கைது செய்யப்பட்ட தனது தயாரை விடுவிக்க கோரி வழக்கு தொடர்ந்தார்.
அவருடைய மனுவில் கூறப்பட்டதாவது "எனது தாயார் பெயர் ஜெயந்தி. இவர் இலங்கையில் பிறந்தவர். அவருடைய காலத்தில் ஏற்பட்ட அங்கு நிலவிய போர் சூழல் காரணமாக தமிழகம் வந்த இவர், தமிழரை திருமணமும் செய்து கொண்டார். இவர் ஒரு இந்தியர் என்பதற்கான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை வைத்துள்ளார். எனது தாயார் அடிக்கடி தனது பணி சமபந்தமாக இத்தாலி சென்று வருவார்.
இவ்வாறு கடந்த ஜூலை 1ஆம் தேதி இத்தாலி சென்று திரும்பும்போது எனது தாயாரை சென்னை விமான நிலையத்தில் சட்ட விரோதமாக இந்தியா வந்துள்ளதாக கூறி அவரை கைது செய்துள்ளனர். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதி டி ராஜா விசாரித்தார். அப்போது மத்திய அரசு சார்பில் திவ்யாவுக்கு எதிராக வாதாடப்பட்டது. திவ்யாவின் தாயார் ஜெயந்தி, இலங்கை பாஸ்போர்ட்டை வைத்துள்ளார்.
ஆனால் கடந்த 1994ஆம் ஆண்டே இலங்கை பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்ட நிலையில் சட்ட விரோதமாக இந்திய பாஸ்போர்ட்டை பெற்றுள்ளதாக ஜெயந்தி மீது குற்றம் சாட்டப்பட்டது. இரு தரப்பு வாதத்தையும் விசாரித்த நீதிபதி "ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை வைத்திருந்தால் மட்டும் அவர் இந்தியர், குடியுரிமை பெற்றவர் என்று சொல்ல முடியாது. அதற்கான அரசு அமைப்புகள் முறையான அங்கீகாரம் கொடுத்தால் மட்டுமே இந்தியராக முடியும்" எனத்தெரிவித்து திவ்யா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.