ஐஐடி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து பாஸ்கர் ராமமூர்த்தி விளக்கம்
வேலுசாமி (Author) Published Date : Feb 26, 2018 15:39 ISTஇந்தியா
சென்னை இந்திய தொழில் நுட்ப கழகத்தில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று தேசிய துறைமுக நீர்வழி பாதை உருவாக்குவது தொடர்பாக கடல்சார் தொழில்நுட்ப துறைக்கும், மத்திய கப்பல் துறைக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, ஐஐடி நிர்வாக இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி மற்றும் இதர பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஐஐடியை சேர்ந்த இரு மாணவ மாணவியர் இணைந்து தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் கணபதி வாழ்த்து பாடலை பாடியுள்ளனர். இதே மாணவர்கள் நிகழ்ச்சியின் முடிவின் போது தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியுள்ளனர். இது திட்டமிட்டு தமிழை அவமானப்படுத்துவதாக ஏராளமான சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து விளக்கமளித்துள்ள பாஸ்கர் ராமமூர்த்தி "எந்த பாடலை பாடவேண்டும் என்பது மாணவர்களின் முடிவு தான். நிர்வாகம் மாணவர்களை இதை பாடவேண்டும், அதை பாட வேண்டாம் என எப்போதும் கட்டாயப்படுத்தியது இல்லை. இந்த நிகழ்ச்சியில் பாடல் எதுவும் ஒளிபரப்பு செய்யவில்லை. தேசிய கீதம் ஒளிபரப்ப வில்லை. ஆகையால் இதை பெரிது படுத்த வேண்டாம்" என அவர் கேட்டு கொண்டுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஐஐடி நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டிய அவசியமில்லை. தமிழக அரசின் நிகழ்ச்சிகளில் தான் கட்டாயம் பாட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.