எங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்
மோகன்ராஜ் (Author) Published Date : Jun 23, 2018 15:58 ISTஇந்தியா
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை 277.30 கிமீ தூரத்தில் 10000 கோடி செலவில் அமைய உள்ளது. மத்திய அரசின் பாரத்மாலா ப்ரயோஜனா திட்டத்தின் கீழ் கடந்த பிப்ரவரி 15இல் சட்டசபையில் எட்டுவழிச்சாலை அமைப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை கடந்த 18ஆம் தேதி முதல் துவங்கியுள்ளனர். இந்த திட்டத்தை எதிர்த்து நீண்ட நாட்களாக கண்ணீருடன் போராடி வரும் நிலையில் மீடியாக்களும், பிரபலங்களும் இன்னும் இந்த போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை.
இந்த திட்டத்தினால் அமையும் எட்டு வழிசாலையை நிச்சயம் விவசாயிகள், பொது மக்கள், லாரிகள் பயன்படுத்த முடியாது. அப்போ யாருக்காக இந்த திட்டம் என்று சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்த திட்டத்திற்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் உடனுக்குடன் கைது செய்து ஜெயிலில் தள்ளுகின்றனர். நிலத்தை அதிகாரிகள் கையகப்படுத்தும் போது அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு அதிகாரவர்க்கமாக நிலத்தை அபகரித்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த திட்டம் 10000 கோடி என்று தெரிவித்துள்ளனர். இந்த எட்டு வழிச்சாலை அமைப்பதற்கு அதிகபட்சமாக 4000கோடி மட்டுமே செலவாகும், மீதமுள்ள 6000 கோடியை என்ன செய்வார்கள் என்றும், ஒரு மணிநேரத்தை குறைக்க எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, விவசாயத்தை அழித்து தான் அமைய வேண்டும் என்றால் அப்படி ஒரு திட்டம் தேவையில்லை என்றும் கதறி வருகின்றனர் விவசாயிகள்.
முன்னதாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், மன்சூர் அலிகான் ஆகியோரை FIR பதிவு செய்து கைது செய்துள்ள நிலையில் பியூஸ் மனுஷுக்கு மட்டும் பெயில் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சமூக ஆர்வலர் வளர்மதியும் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் எதிர்ப்புகளால் தற்போது அரசாங்கம் இழப்பீடு தொகையை 4 மடங்காக உயர்த்தியுள்ளது.
ஆனாலும் விவசாயிகள் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் சாலை பணிகள், பொது கட்டிட பணிகள் போன்ற பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதியதாக 10000 கோடி என்ற ஒரு புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எத்தனை உயிர்கள், காடுகள், மரங்கள் பறிபோகும் என்று தெரியவில்லை ஆனால் விவசாயம் என்பது ஒன்று இனி தமிழகத்தில் இருக்காது என்பது மட்டும் உறுதியாகிறது.