கேரளா மக்களின் உதவிக்காக உண்டியல் பணத்தை வழங்கிய அனுப்பிரியா
மோகன்ராஜ் (Author) Published Date : Aug 20, 2018 10:41 ISTஇந்தியா
கேரளா மக்களின் நிவாரண பணிகளுக்கு உதவ ஏராளமான தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர். வெள்ளத்தால் தவித்து வரும் மக்களை காப்பாற்ற மீட்பு பணிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். நேற்று மட்டும் 22,000 பொது மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர். வெள்ளத்தால் தத்தளித்து வரும் கேரளா மக்களுக்கு தொடர்ந்து நிதி உதவிகளை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் 9வயது சிறுமி, தான் சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை கேரளா மக்களின் உதவிக்கு அளித்த சம்பவம் மனதை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த சிவசண்முகம் என்பவரின் மகள் அனுப்பிரியா, இவருக்கு தன்னுடைய பணத்தில் சைக்கிள் வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. இதற்காக நீண்ட காலங்களாக பணத்தை சிறுக சிறுக சேமித்து 8000ரூபாயை சேமித்துள்ளார்.
வரும் அக்டொபர் 19ஆம் தேதி இவருடைய 10வது பிறந்த நாள் வருகிறது. தன்னுடைய பிறந்த நாளில் சைக்கிள் வாங்குவதற்காக காத்திருந்தார். இந்நிலையில் கேரளா மக்கள் வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவித்து வருவதை அறிந்து தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கேரளா மக்களுக்காக நிதி உதவியாக அளித்துள்ளார்.
இவருடைய உதவும் மனப்பான்மைக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. இதனை அறிந்து சைக்கிள் நிறுவனமான ஹீரோ நிறுவன தலைவர் பங்கஜ் எம் முஞ்சல் என்பவர், சிறுமி அனுப்பிரியாவின் உதவும் மனப்பான்மைக்கு பரிசாக வருடந்தோறும் புது புது சைக்கிளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.