Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பேருந்து நிலையங்களில் அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்

குழந்தை தொழிலாளர்களுக்கான சட்டங்கள் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் சிறு வயதில் உழைக்கும் பாவப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.

உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினமான இன்று உலகம் முழுவதும் பொது மக்களிடையே குழந்தை தொழிலாளர்கள் குறித்த விழிப்புணர்வுகள் பல்வேறு சமூகநல அமைப்புகளால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நாளை பன்னாட்டு தொழிலாளர் அமைப்பான ஐஎல்ஓ வின் உடன்படிக்கையினால் கடந்த 2002முதல் குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு ஏற்படுத்த துவங்கப்பட்டது. இந்நாளில் உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென ஏராளமான சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த 2006 அக்டொபர் 10ஆம் தேதி முதல் வீடு, கடைகள் மற்றும் ஓட்டல்களில் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடை செய்துள்ளது. ஆனாலும் சட்டம் இருக்கிறதே தவிர நடைமுறையில் இருப்பதாக தெரிய வில்லை. பேருந்து நிலையங்கள், ஓட்டல்கள் மற்றும் சாலையோர கடைகள் போன்ற பொது இடங்களில் 5 முதல் 18 வயதிலான குழந்தைகள், வயிற்று பிளைப்புக்காகவும் தனது முதலாளிக்காகவும் குண்டூசி, புத்தகம், தண்ணீர் போன்ற பொருட்களை கூவி விற்று கொண்டுதான்  வருகின்றனர்.

குறிப்பாக ஒவ்வொரு மாநகர பேருந்து நிலையங்களிலும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட, பெற்றோர்கள் இல்லாத குழந்தைகள், ஊனமுற்ற குழந்தைகள் போன்றோர் வயிற்று பிழைப்புக்காக பொருட்களை விற்று வருகின்றனர். பார்த்தாலே பாவமாக இருக்கும். இதை கண்ட பிறகு அவர்களுக்கு 100, 500, 1000 ரூபாய் கொடுத்தாலும் பிஞ்சு குழந்தைகள் வாங்க மாட்டார்கள். தங்களது கைகளில் இருக்கும் புத்தகங்கள், குண்டூசிகள் இவற்றிற்கான பணத்தை மட்டும் தந்தால் போதும் என கெஞ்சுவார்கள்.  

விளையாடி மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க வேண்டிய பருவத்தில் உழைக்கும் குழந்தைகளின் இத்தகைய செயலுக்கு முதலாளிகளின் கட்டளைகள், அவர்கள் மீதான பயம், பொருளை விற்றால் மட்டுமே சாப்பாடு போன்றவை காரணங்களாக அமைகிறது. இதனை மிகவும் எளிதாக ஒழித்துவிட முடியாது. இதற்கு பின்னால் ஒரு அரசாங்கமே இயங்கி கொண்டிருக்கிறது. இதனை தட்டி கேட்க மனமில்லாமல் மக்களும் இன்றைய சூழலுக்கேற்றவாறு தன்னுடைய குடும்பம் என்ற ஒற்றை பாதையில் சமூகத்தை மறந்து ஓடி கொண்டிருக்கின்றனர்.

இப்படி ஒரு வேலை சோற்றுக்காக கெஞ்சும் பிஞ்சு குழந்தைகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. மக்களை காப்பாற்ற வேண்டிய, மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசாங்கமும் வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க மக்கள் திருந்தினால் மட்டுமே முடியும். இன்று ஏராளமான சமூகநல அமைப்புகள் மக்களை திருத்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இன்றாவது பொது மக்கள் குழந்தை தொழிலாளர்கள் படும் துயரத்தையும், அவர்களுக்கு நேரும் அவலங்களையும் நினைத்து பார்க்க வேண்டும். 

பேருந்து நிலையங்களில் அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்