பசுமைவழி சாலை என்ற பெயரில் தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற போகிறார்கள்
மோகன்ராஜ் (Author) Published Date : Jun 15, 2018 16:40 ISTஇந்தியா
தற்போது தமிழகத்தில் சேலம் - சென்னை வரையிலான பசுமை வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. 8வழிசாலையாக அமையவுள்ள இந்த பசுமை வழிசாலை, காஞ்சிபுரத்தில் 59கிலோ மீட்டரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிலோ மீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கிலோ மீட்டரும், தருமபுரி மாவட்டத்தில் 53கிலோ மீட்டரும், சேலம் மாவட்டத்தில் 38கிலோ மீட்டர் தூரமும் அமையவுள்ளது.
தற்போது சேலத்தில் இருந்து சென்னைக்கு 6மணி நேரத்தில் (364கிமீ) சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆம்பூர், காஞ்சிபுரம் வழியாகவும், 6மணி 16நிமிடங்களில் (354கிமீ) சேலம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர் வழியாகவும் மக்கள் பயணம் செய்து வருகின்றனர். தற்போது புதிதாக அமையவுள்ள பசுமை வழிச்சாலை சேலம், அரூர், தீர்த்தமலை, செங்கம், ஆரணி, செய்யாறு, மணிவாக்கம் வழியாக மூன்று மணிநேரத்தில் (274கிமீ) பயணம் செய்யும் விதமாக அமையவுள்ளது.
10 ஆயிரம் கோடி செலவில் உருவாகவுள்ள இந்த பசுமைவழிச்சாலை அமைவதற்கு விவசாய நிலங்கள், பொது நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்பட மொத்தமாக 2791 ஏக்கர் நிலப்பரப்பு தேவைப்படுகிறது. இதனால் ஏராளமான விவசாய நிலங்கள் அழிக்கப்படும் என்று இந்த திட்டத்திற்கு எதிராக உள்ளூர் கிராம விவசாயிகள் குரல் கொடுத்து வந்த நிலையில் போராட்டம் தீவிரமாவதற்குள் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியாளர்கள் கிராமம் கிராமமாக சென்று இந்த திட்டத்தின் விளக்கத்தையும், அதன் பயனையும் எடுத்துரைத்து வருகின்றனர்.
இந்த எட்டு வழிசாலை அமைந்தால் 6மணிநேரமாக இருக்கும் பயண நேரம் 3 மணிநேரமாக குறைக்கப்படும். ஆனால் நேரத்தை குறைப்பதற்காக 2லட்சம் மரங்கள், 2700 நிலப்பரப்புகள், 2 மலைகள் போன்றவற்றை அழிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று விவசாயிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்தவும், பணிகளை விரைவாக துரிதப்படுத்தவும் அரசு முன்வந்துள்ளது. இதற்காக தற்போது நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் அரசு களமிறங்கியுள்ளது.
இந்த திட்டத்திற்கு ஏதாவது ஆட்சேபம் இருந்தால் கிராம மக்கள் ஜூன் 14ஆம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகத்தில் தெரிவிக்கலாம் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது. இதனால் நேற்று கடைசி நாள் என்பதால் இந்த திட்டத்திற்கு எதிரான குரல் அதிகரித்து வந்தது. ஆனால் இதனை மீடியாவும், செய்தித்தாள்களும் கவனிக்காததால் இந்த போராட்டம் தீவிரமடையாமல் உள்ளது. ஆனாலும் எங்களது உயிரை கொடுப்போமே தவிர எந்த காரணத்திற்காகவும் விவசாய விளை நிலங்களை இழக்க மாட்டோம் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இது குறித்து சேலம், தருமபுரி மாவட்ட விவசாய மக்கள் கூறுகையில் "தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பல லட்சம் மரங்கள், விளை நிலங்களை நாசமாக்க காத்து கொண்டிருக்கின்றனர். பணத்திற்கு தமிழக அரசு செய்யும் இந்த காரியம் மிகவும் கீழ்தரமானது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்த பட்டால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும். கோடி கோடியாய் கொடுத்தாலும் எங்களது உரிமையை எங்களது வாழ்வாதாரத்தை நாங்கள் இழக்க மாட்டோம்.
விவசாயம் ஏற்கனவே அழிந்து விட்ட நிலையில் மிச்ச மிருக்கும் விவசாயிகளையும் முற்றிலும் அழித்து விட வேண்டும் என்ற நோக்கில் அரசாங்கம் பசுமை வழிச்சாலை திட்டத்தை கையில் எடுத்துள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி வரும் தமிழக அரசு எப்போது திருந்த போகிறது என்று தெரியவில்லை. ஆனால் நிலம் எங்களுடைய உரிமை, அதற்காக எங்களது எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்வோம்.
ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டத்தை போன்று தமிழக விவசாயிகளுக்கான இந்த போராட்டத்திலும் வெற்றி பெறுவோம். இதற்கு மீடியா மற்றும் பொது மக்களும் எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்டால் பேரில் மட்டுமே பசுமை இருக்கும், சுற்றியுள்ள பகுதி முழுவதும் சுடுகாடாகத்தான் இருக்கும். இந்த திட்டத்தை நடைமுறை படுத்துவதற்கு முன்பு இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் அனைத்து விவசாயிகளையும் கருணைக்கொலை செய்துவிடுங்கள்" என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.