நேற்று தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
வேலுசாமி (Author) Published Date : Mar 14, 2018 10:18 ISTஇந்தியா
கடந்த சில தினங்களாக பொதுமக்கள் வெயிலால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் பெரும்பாலும் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தனது நிலங்களுக்கும், விவசாயத்திற்கும் தண்ணீரின்றி தவித்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இந்திய பெருங்கடலில் உள்ள மாலத்தீவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.
இது தற்போது வலுவுற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இன்று மற்றும் நாளையும் தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் "மாலத்தீவுக்கு அருகே உருவான காற்றழுத்தம் தற்போது வலுவுற்று வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவுக்குள் அரபி கடலை நோக்கி நகர்ந்து பின்னர் லட்சத்தீவை நோக்கி நகர உள்ளது. இதனால் கடலோர பகுதிகளிலும், கேரளாவின் தென் பகுதிகளிலும் 2 நாட்களுக்கு கடல் கொந்தளிப்பாக காணப்படும்.
இதனால் லட்சத்தீவு முதல் மன்னர் வளைகுடா வரை உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம். நிலவி வரும் காற்றழுத்த மண்டலம் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கன மழையும், வட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது." என்று அவர் தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி கேரளா முதல் மந்திரி பிரனாயி விஜயன், மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று விடிய விடிய பெய்த கனமழையால் குற்றாலம் போன்ற அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று பெய்த கனமழை காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் இன்று பொது தேர்வு நடைபெறுவதால் பொது தேர்வு மாணவர்களை தவிர மற்றவர்களுக்கு மட்டும் விடுமுறை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.