தேனீ மாவட்டம் குரங்கிணி காட்டு தீயில் சிக்கிய 27 பேர் மீட்பு 9 பேர் பலி
வேலுசாமி (Author) Published Date : Mar 12, 2018 10:22 ISTஇந்தியா
சென்னை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 39 மாணவ மாணவிகள் தேனீ மாவட்டம், போடி அடுத்த குரங்கிணி மலைப்பகுதியில் ட்ராக்கிங்காக சென்றிருந்தனர். இதில் சென்னையில் இருந்து 27 பேரும், ஈரோட்டில் இருந்து 12 பேரும் இரு அணிகளாக சென்றிருந்தனர். அப்போது ஒத்தமலை என்ற பகுதியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது காட்டு தீயில் சிக்கியுள்ளனர்.
உடனே தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், காவல் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பொது மக்கள் ஆகியோர் உதவியுடன் காட்டு தீயில் சிக்கிய 27 மாணவ மாணவிகள் மீட்கப்பட்டனர். பின்னர் மீட்கப்பட்ட மாணவியர் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 6 பேர் படுகாயாமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியரை துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். இதனை அடுத்து நள்ளிரவு 3:50 மணியளவில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் "காட்டு தீயை அணைக்கவும், காட்டு தீயில் சிக்கியவர்களை மீட்கவும் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து மூன்று ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்படும். மீட்கப்பட்ட 27 பேருக்கும் தக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது." என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் படுகாயமடைந்த மாணவியரின் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகின்றனர்.
மீதமுள்ள மாணவியரின் நிலை என்னவென்று தெரியாதிருந்த நிலையில் 9 பேர் காட்டு தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தேனீ மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில் 6 பேர் சென்னையும், 3 பேர் ஈரோடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். இதில் சென்னையை சேர்ந்த பிரேமலதா, அகிலா, புனிதா, சுபா, அருண், விபின் ஆகியோரும், ஈரோட்டை சேர்ந்த விஜயா, விவேவ், தமிழ்ச்செல்வி ஆகியோரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
தற்போது மீதமுள்ள மாணவியரை தேடும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. ஏராளமான பொதுமக்களும், முக்கிய பிரபலங்களும் உயிரிழந்த மாணவியருக்கு இரங்கலையும், மீட்பு பணியில் ஈடுபடும் பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தங்களது நன்றிகளை பதிவு செய்துள்ளனர்.