ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது
வேலுசாமி (Author) Published Date : Feb 28, 2018 09:55 ISTஇந்தியா
முன்னாள் நிதியமைச்சர் பா சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் இன்று சென்னையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட விரோதமாக ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் கார்த்தி சிதம்பரத்திற்கு வெளிநாடு தப்பி செல்லாத அளவிற்கு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனுடன் அவரின் 90 லட்சம் மதிப்பிலான வங்கி கணக்குகளும் அமலாக்கத்துறை சார்பில் மூடப்பட்டது. இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இந்தியா பேனர்ஜி, அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் திரும்பி விட வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதன் பிறகு கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றார். பின்னர் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரன் ராமன் கடந்த 16-ஆம் தேதி அமலாக்கத்துறை சார்பில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது லண்டன் சென்று திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ சென்னையில் கைது செய்துள்ளது. இன்று மாலை 4 மணிக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.