ஐபிஎல் கிரிக்கெட்டால் பலவீனமடையும் தமிழர் உரிமைக்கான போராட்டங்கள்
வேலுசாமி (Author) Published Date : Apr 09, 2018 15:41 ISTஇந்தியா
தற்போது தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் தமிழரின் உரிமைக்காக ஏராளாமானோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கும் போராட்டமும் பல நாட்களை கடந்து நடந்து வருகிறது. சிறு சிறு கிராமங்களில் ஆரம்பித்த இந்த போராட்டங்கள் தற்போது தமிழகம் மற்றும் உலகத்தின் பல்வேறு இடங்களிலும் நடந்து வருகிறது.
இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக பல கல்லூரி மாணவ மாணவியர், அரசியல் காட்சிகள், சினிமா பிரபலங்கள் மற்றும் ஏராளமான சமூக நல அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர். 50 நாட்களை கடந்து நடந்து வரும் இந்த போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக நடிகர் சங்கம் சார்பில் நேற்று அறவழி போராட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, எஸ்ஜே சூர்யா, ஜிவி பிரகாஷ், நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் மற்றும் தமிழரின் உரிமைக்கான இந்த போராட்டங்கள் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவுகளால் பல தமிழர்களை எழுச்சியுற செய்துள்ளது. ஆனால் தற்போது ஐபிஎல் T20 போட்டி தற்போது நடைபெற்று வருவதால் ஏராளமானோர் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். இது போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு வேதனையை அளித்துள்ளது. கிரிக்கெட் என்பது சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த, இந்தியாவின் முக்கிய விளையாட்டு போட்டிகளில் ஒன்று.
உலகம் முழுவதும் பிரபலமடைந்த கிரிக்கெட்டில் தமிழர்களின் ஆர்வம் எல்லையற்றது. கிரிக்கெட் மக்களின் வாழ்க்கையில், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும், ஏராளமான இளைஞர்களுக்கு வாழ்க்கையாகவே மாறி விட்டது. இத்தகைய கிரிக்கெட்டை, தமிழர்களின் உரிமைக்காகவும், விவசாய மக்களின் வாழ்க்கையையும் நினைத்து தமிழகத்தில் இந்த முறை நடைபெறும் ஐபிஎல்லை தடை செய்யக்கோரி ஏராளமான சமூக ஆர்வலர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஏப்ரல் 10, 20, 28, 30 மற்றும் மே 5, 13,20 போன்ற தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை, டெல்லி, ராஜஸ்தான், கொல்கத்தா போன்ற அணிகளை எதிர்கொள்கிறது. இதில் நாளை நடைபெற உள்ள சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டியை நடத்த விடமாட்டோம் என ஏராளமானோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை மீறினால் மைதானத்தில் விளையாட்டு நடைபெறும்போதே போராட்டம் நடைபெறும் என்றும் ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
ஐபிஎல் என்பது ஒவ்வொரு வருடமும் நிகழும் பொழுதுபோக்குக்கான ஒரு விளையாட்டு மட்டுமே. ஆனால் இதற்காக விவசாயிகளுக்காக, தமிழருக்காக தமிழகத்திலும், லண்டன், பிரான்சு, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் போராட்டங்களை புறக்கணிப்பது ஒவ்வொரு தமிழனையும் வேதனை அடைய செய்கிறது.