ரஜினி கமலை ஓரங்கட்டி சிம்புவுக்கு ஆதரவாக நிற்கும் கர்நாடக மக்கள்
வேலுசாமி (Author) Published Date : Apr 12, 2018 11:29 ISTஇந்தியா
காவிரி நீர் தொடர்பான பிரச்சனை இன்று நேற்று இல்லை, கடந்த 138 வருடங்களுக்கும் மேலாக கர்நாடகாவுக்கும், தமிழகத்துக்கும் இடையே நடந்து வருகிறது. ஆனால் இத்தனை வருடங்களை கடந்தும் தமிழகத்திற்கு சுமூக தீர்வு கிடைத்தபாடில்லை. இதில் முழுமையாக பாதிப்படைவது காவிரி நீரை வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் விவசாய மக்கள் மட்டுமே. இந்த பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால் தமிழகத்தை சற்றும் திரும்பி பாராத மத்திய அரசு இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரியும் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் என பல்லாயிரக்கணக்கானோர் விவசாயிகளுக்கு குரல் கொடுக்க முன்வந்துள்ளனர்.
ஆனால் போராட்டக்களத்தில் ஈடுபட்டுள்ள தமிழக மக்கள் அரசியல் கட்சிகள் போராட்டங்களால் அவர்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக நினைத்து ஏமாற்றம் அடைகின்றனர். ஆனால் இத்தகைய அரசியல் கட்சிகளின் போராட்டத்தில் வெறும் அரசியல் மட்டுமே நிறைந்துள்ளது. இது மக்களுக்கு புரிய வாய்ப்பில்லை. இந்த காவிரி பிரச்சனை 100 வருடங்களுக்கு மேலாக நீடித்து வருவதற்கு அரசியல் வாதிகளே முழு காரணம்.
இதனை நடிகர் சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் போட்டுடைத்தார். முன்னதாக கர்நாடகாவில் ரஜினி, கமல் ஆகியோருக்கு ஆதரவு பெருகியிருந்தது. ஆனால் தமிழகத்தில் அரசியலை நிகழ்த்தி வரும் அவர்களுக்கு கர்நாடகாவில் எதிர்ப்புகள் மேன்மேலும் வலுத்து வருகிறது. இந்நிலையில் சிம்பு சமீபத்தில் கர்நாடகா மற்றும் தமிழக மக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை வைத்து அரசியல் கட்சிகள், அரசியலை தான் செய்து வருகிறது. இதனை உணர்ந்து கர்நாடக மக்கள் தமிழர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுக்க வேண்டும், இதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுங்கள் என்று நடிகர் சிம்பு கேட்டு கொண்டார். இவரின் ஆலோசனைக்கேற்ப கர்நாடக மக்கள் ஏராளமானோர் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போன்ற விடியோவை வெளியிட்டு அரசியல் காட்சிகளை திணற செய்தனர்.
எனது ஆலோசனையை ஏற்று தமிழர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போன்ற விடியோவை வெளியிட்ட கன்னட மக்களுக்கு சிம்பு உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்போது கர்நாடகா மக்களிடையே வைரலாகி வருகிறது. காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக அரசாங்கத்திடம் பேசி பயனில்லை, இதனை இரு மாநில மக்களும் தான் தீர்த்து கொள்ள வேண்டும் என்றும் சிம்பு கேட்டு கொண்டுள்ளார். அரசியலை ஓரங்கட்டி மக்கள் ஒரு முடிவுக்கு வந்தால் தான் இதற்கு முடிவு கிடைக்கும் என்ற சிம்புவின் ஆலோசனைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகாவிலும் ஆதரவு பெருகி வருகிறது.
இதனால் சிம்புவின் மீது கர்நாடகா மக்களிடையே ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடகா நடிகர் ஆனந்த் நாக் அளித்த பேட்டியில் "ரஜினி மற்றும் கமலின் அரசியல் வரவேற்பிற்கு பிறகு அவர்களிடம் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தேன். காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக மாறுபட்ட அணுகுமுறையை கையாள்வார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர்களும் அரசியல்வாதிகளை போல வழக்கமான முறையை தான் கையாண்டு வருகின்றனர். நான் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல. தமிழர்கள் நல்லவர்கள், மேன்மையானவர்கள்.
நடிகர் சிம்பு, மற்றவர்களை போல அல்லாமல் வித்தியாசமாக தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க போராடி வருகிறார். இவரிடம் இருக்கும் தெளிவு, ரஜினி கமலிடம் இல்லாததை நினைத்து வருத்தமடைகிறேன். தமிழகத்தில் அரசியல்வாதிகள் தங்களின் அரசியலை நிலைப்படுத்த பழைய அரசியவாதிகளின் செயல்பாடுகளை கடைபிடிக்கின்றனர். காவிரி நதிநீர் பிரச்சனையில் சுமூக முடிவு கிடைக்க தமிழக அரசியல்வாதிகள் விரும்பவில்லை. காரணம் அவர்கள் தமிழகத்தில் தங்களது அரசியலை நடத்த உதவியாக இருக்கிறது." என்று அவர் தெரிவித்துள்ளார்.