தீக்குளித்த மதிமுக நிர்வாகி ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
வேலுசாமி (Author) Published Date : Apr 02, 2018 16:06 ISTஇந்தியா
தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை கடந்த 28-ம் தேதி அனுமதியளித்தது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இதன் பிறகு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி கடந்த மார்ச் 31-ம் தேதி மதுரை பழங்காநத்தத்தில் துவங்கியது.
இந்நிகழ்ச்சியில் திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின், மதிமுக தொண்டர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் மேடையில் வைகோ பேசிக்கொண்டிருந்தபோது, மதிமுக நிர்வாகி சிவகாசியை சேர்ந்த ரவி என்பவர் திடீரென தீக்குளித்தார்.
இதனை அடுத்து தீக்காயங்களுடன் ரவி மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ரவி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ரவிக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இறந்த ரவியின் உடலுக்கு வைகோ, மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.