2025ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் - பிரதமர் மோடி சபதம்
வேலுசாமி (Author) Published Date : Mar 24, 2018 10:32 ISTஇந்தியா
ஒவ்வொரு ஆண்டும் உலக காசநோய் தினம் மார்ச் 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காச நோய் என்பது TB (TUBERCULOSIS) எனப்படும் கொடிய நோய். இந்த நோயானது மைக்ரோ பாக்டிரியம் டியுபர் குளோசிஸ் (Mycobacterium Tuberculosis) எனப்படும் கிருமியால் தொற்றக்கூடியது. இந்த நோய் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களால் காற்றில் பரவக்கூடிய தொற்று நோய். இதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் பழகுபவர்கள் அல்லது அவர்கள் இரும்பும் போதோ தும்பும் போதோ உடன் இருப்பவர்களுக்கு இந்த நோய் விரைவாக பரவுகிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை, முழுவதும் காச நோய் பாதிப்பு என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நோய், நுரையீரல், சிறுநீரகம், குடல் பகுதிகள், எலும்பு மூட்டுகள் போன்ற பல உடல் உறுப்புகளை தாக்க வல்லவை. சில மருந்துகளின் உதவியினால் நோய் மேன்மேலும் பரவாமல் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதற்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருந்தாலும் இந்த நோயை முற்றிலுமாக பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து அளிக்க இன்னும் முறையான வழிமுறைகளை கண்டுபிடிக்கவில்லை.
உலகின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மனிதர்கள் இந்த நோயால் தாக்கப்படுவதாகவும், இதனால் புதியதாக 80-90 லட்சம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த ஆண்டுகளில் 1 கோடிக்கு மேலான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் 25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நோயால் பெரும்பாலும் ஆப்பிரிக்க நாட்டு மக்கள் அதிகமானோர் இறந்துள்ளனர். இந்த நோயானது வளர்ந்து வரும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் 80 சதவீதமும், அமெரிக்காவில் 5-10 சதவீத மக்களிடமும் அறியப்பட்டுள்ளது. இந்த கொடிய நோயை தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகளும், ஏராளமான அமைப்புகளும் காச நோயை சார்ந்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். இன்று உலக காச நோய் தினம்.
இந்நாளில் நமது நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் தனது டிவிட்டரில் "இந்திய அரசு காச நோயை அழிக்க மும்முரமாக செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 2030 க்குள் காச நோய் இல்லாத வாழ்க்கையை உருவாக்குவதாக சபதம் மேற்கொண்டுள்ளனர். ஆனால் இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து 2025 க்குள் காச நோய் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும்." என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் காச நோய் குறித்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்றையும் நம்மிடம் பகிர்ந்துள்ளார்.