கர்ப்பிணி உயிரிழப்புக்கு காரணமான காமராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
வேலுசாமி (Author) Published Date : Mar 08, 2018 10:08 ISTஇந்தியா
தனியார் நிதி நிறுவன ஊழியரான ராஜா என்பவர் தனது கர்ப்பிணி மனைவியான உஷாவுடன் தனது நண்பரின் திருமண நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். வரும் வழியில் துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது போலீசார் இவர்களது இருசக்கர வாகனத்தை தடுத்துள்ளனர். அவர்கள் நிற்காமல் சென்றதால் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் சுமார் 7 கிலோ மீட்டருக்கு துரத்தி சென்றுள்ளார்.
பின்னர் திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டானா அருகே சென்றபோது காமராஜ், அவர்களின் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்துள்ளார். இதனால் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். கீழே விழுந்த கர்ப்பிணி பெண்ணான உஷா மீது ஒரு வேன் எறியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தனது கணவன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கீழே விழுந்த ராஜா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தின் போது பொதுமக்கள் காவல் ஆய்வாளர் காமராஜை பிடிக்க முற்பட்ட போது அவர் தப்பி சென்றுள்ளார். இதனை அடுத்து கர்ப்பிணியின் மறைவிற்கு காரணமான காமராஜை கைது செய்யக்கோரி திருச்சி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது தடியடி நடத்தியதால் ஏராளமானோர் காயமடைந்தனர். பின்னர் காமராஜை கைது செய்வோம் என காவல் அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது காவல் அதிகாரி காமராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர் மீது தனிநபர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், கொலை செய்யும் நோக்கில் தாக்குவது போன்ற 304/2 மற்றும் 333 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இவரை வரும் 21-ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தற்போது இவர் திருச்சியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.