பிரதமர் நரேந்திர மோடி நாளை உண்ணாவிரதம்
ராசு (Author) Published Date : Apr 11, 2018 10:55 ISTஇந்தியா
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் காவேரிக்காக போராட்டம், உண்ணாவிரதம், பேரணி, நடைபயணம், கண்டன ஆர்ப்பாட்டம் என்று எல்லா முறைகளையும் பின்பற்றி வருகின்றன. தமிழகத்தில், நிலைமை இப்படி இருக்க, இந்தியாவின் மற்ற மாநிலங்களில், பாரத் பந்த் என்ற பெயரில் தலித் அமைப்பினரும் அதனை எதிர்க்கும் வகையில் மேல்குடி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருக்குன்றனர். சில குறிப்பிட்ட நகரங்களில் 144 ஊரடங்கு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் முதல், காவிரி விவகாரம் தொடரப்பட தமிழக எம்பிக்களும், சிறப்பு அந்தஸ்து வேண்டுமென்று ஆந்திர எம்பிக்களும் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் சபை அலுவல்களை நிறைவேற்றுவதில் கடுமையான தேக்கம் நிலவிவருகிறது.
இந்நிலையில், பாராளுமன்றத்தின் மிக முக்கியமான பட்ஜெட் கூட்டத்தொடரில் கூச்சல்களும், குழப்பங்களும், அமளிகளும் செய்து காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் சபை அலுவல்களை முடக்கி வருகின்றன. இதனால், கடந்த வெள்ளிக்கிழமை, பட்ஜெட் கூட்டத்தொடரை சபாநாயகர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இதுவரையில், 250 மணி நேரங்கள் பட்ஜெட் குறித்த எந்த விவாதமுமின்றி வீணடிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த முடக்கத்தால், மத்திய அரசுக்கு நாள் ஒன்றிற்கு ரூபாய் 9 கோடி இழப்பும் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, எதிர்கட்சிகளை கண்டிக்கும் விதமாக, அனைத்து பாரதிய ஜனதா கட்சி எம்பிக்களும் ஏப்ரல் 12 ஆம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொள்வோம் என்று சென்ற வாரம் அறிவித்தனர். இந்த அறிவிப்புக்குப் போட்டியாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஏப்ரல் 9 ஆம் தேதி தன் கட்சி எம்பிக்களுடன் புது டில்லியில் உண்ணாவிரதமிருந்தார். தலித் போராட்டத்தை கட்டுக்குள் வைக்காததைக் கண்டித்தும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதமானது நிகழ்ந்தது.
ஏப்ரல் 12 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, தன் அலுவலகத்தில் இருந்தே உண்ணாவிரதம் மேற்கொள்வார். மேலும், கர்நாடக தேர்தல் வேலைகளில் தீவிரமாக இருக்கும் அமித் ஷா கர்நாடக மாநிலம் ஹுப்லியில் உண்ணாவிரதம் இருப்பார் என்றும் மற்ற பாஜக எம்பிக்கள் தங்கள் தொகுதிகளில் உண்ணாவிரதம் இருப்பர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.