புதுச்சேரியில் நவீன முறையில் இயங்கும் சுகாதார மீன் அங்காடி
ராசு (Author) Published Date : Mar 19, 2018 11:17 ISTஇந்தியா
"சுத்தம் சுகாதாரம்" என்பது தற்போது நாம் வாழும் சூழலில் மிக முக்கியமான ஒன்று. எந்த அளவிற்கு நாம் நம்மையும் நம்மை சுற்றியிருக்கும் இடங்களையும் சுத்தமாக வைத்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம் உடல்நிலை பாதுகாப்பாக இருக்கும். இப்படி நாம் உண்ணும் உணவு வகைகள் வாங்கும் இடங்களும் சுத்தமாக இருந்தால் சுகாதாரத்திற்கு எந்த கேடும் இல்லை.
தற்போது மக்களுக்காக புதுச்சேரியில் நவீன மீன் விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் மீன் விற்பனைக்காக குளிர்சாதன பெட்டிகளில் சுத்தம் செய்த மீன்களை அழகாக வைத்து காட்சி பொருள் போல் மீன்களை விற்பனை செய்கிறார்கள். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிந்தாலும், எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் கூட்டம் இன்னும் வரவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி திறந்த இந்த நிலையத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வாழ்க்கையில் கைவிட பட்ட பெண்களுக்கு, விதவை பெண்களுக்கு தேவையான தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர்.
இது குறித்து வாடிக்கையாளர்களிடம் கேட்கும் போது, இது போன்று சுத்தமான கடைகள் பார்க்கையில் மிக மகிழ்ச்சியாக உள்ளது, இந்த சுத்தம் எப்போதும் கடைபிடித்தால், மிகவும் நன்றாக இருக்கும். பொதுவாக தனியார் கடைகளில் எத்தனை வருடங்கள் ஆனாலும் அவர்க வாடிக்கையாளர்களை கவர்வதற்கு நன்றாக பராமரிப்பார்கள், அனால் பெரும்பாலான அரசு நிலையங்களில் மாதங்கள் போகப்போக பராமரிக்க தவறுவார்கள், அரசு நிலையங்களிலும் இதனை கடைபிடித்தால் மிக மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இது குறித்து விற்பனையாளரிடம் கேட்கும் போது, இது போல் சுத்தமான நிலையம் இருப்பது மிக நல்ல ஒரு விஷயம், நாங்கள் விற்பனைக்காக எங்கும் அலைய தேவை இல்லை. இருந்தாலும் எங்கள் பழைய வாடிக்கையாளர்கள் அவர்களின் வீட்டிற்கு வந்து விற்பனை செய்வதையே விரும்புகின்றனர். நாங்கள் இரு தரப்பு வாடிக்கையாளர்களையும் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் இருக்கிறோம். இன்னும் நாங்கள் எதிர்பார்த்த கூட்டம் வராததால், சற்று தொய்வாக தான் உள்ளது, இருப்பினும் நாங்கள் ஆட்களை வைத்து ஒரு சில வயதான மற்றும் பழைய வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு சென்று விற்கிறோம். இந்த நவீன விற்பனை நிலையம் அதிக வளர்ச்சியடைய அரசு இன்னும் ஓரளவிற்கு விளம்பரம் செய்ய வேண்டும் மற்றும் இங்கு வாங்குபவர்கள் அவர்களது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவித்தால், கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதே போல் அரசின் அனைத்து வகையான நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு பராமரித்தால் மக்கள் மத்தியில் அரசிற்கு பெரும் ஆதரவு கிடைக்கும் என்பது அனைத்து தரப்பு மக்களின் விருப்பமாக உள்ளது.