நமது கோயம்பத்தூரில் நவீன வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட ரோபோடிக் ரெஸ்டாரண்ட்
வேலுசாமி (Author) Published Date : Jul 23, 2018 10:02 ISTஇந்தியா
சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமான கோயம்பத்தூரில் ரோபோட்டிக் ரெஸ்டாரண்ட் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. அவினாசி சாலையில் செந்தில் டவர்ஸ் என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ரெஸ்டாரண்டில் பெயருக்கேற்ப உணவு பொருட்களை ரோபோட்டுக்கள் பரிமாறும் விதமாக நவீன மையமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த உணவு பொருட்களை ரோபோட்டுக்கள் சமையல் அறையில் இருந்து வாடிக்கையாளர் டேபிள் வரை கொண்டு வருகிறது. நவீன வசதிகள் கொண்டிருப்பதால் வசதிக்கேற்ப உணவு பொருட்களின் விலையும் சற்று அதிகம் தான். இந்தியா மற்றும் சீனா உணவு வகைகள் அடங்கிய இந்த ரெஸ்டாரண்டில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் கிடைக்கின்றன.
அதிலும் அசைவ உணவுகளின் பட்டியல் ஏராளமாகவே அமைந்துள்ளது. சினிமா மற்றும் உணவு பொருட்களை சார்ந்த தொழில்கள் தற்போது கோயம்பத்தூரில் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் ஐந்து இளைஞர்கள் ஒன்றிணைந்து கோயம்பத்தூர் மக்களிடையே சீன உணவு வகைகளை பிரபலப்படுத்தும் நோக்கில் ஆரம்பித்துள்ளனர். புது புது உணவு வகைகளுக்கு மக்களிடம் எப்போதும் வரவேற்பு உண்டு.
இதனால் நவீன வசதிகளுடன் கூடிய இந்த ரோபோடிக் ரெஸ்டாரண்ட் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற வாய்ப்புள்ளது. மேலும் இந்த ரெஸ்டாரண்டில் அமைந்துள்ள ரோபோட்டுக்கள், செல்லும் வழியில் எவரேனும் தடை ஏற்படுத்தினால் அதனை கண்டுபிடித்து அவரிடம் வழிவிடும்படி கோரிக்கை தெரிவிக்குமாம். இந்த ரோபோட்டுக்கள் ஒவ்வொன்றும் 7 லட்சம் மதிப்புடையது. இதனை கவனிக்க தனியாக இரண்டு வேலையாட்களை நியமித்துள்ளனர்.
ஐந்து இளைஞர்களில் ஒருவரான வெங்கடேஷ், சொந்த வேலையாக சீனா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். அப்போது சில ரெஸ்டாரண்டில் உணவு வகைகளை ரோபோட்டுக்கள் பரிமாறுவதை பார்த்து இந்த வசதிகளை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று எண்ணியுள்ளார். இவரின் எண்ணத்திற்கேற்ப தற்போது நவீன வசதிகளுடன் ரோபோடிக் ரெஸ்டாரண்ட் நமது கோயம்பத்தூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் நம் மக்கள் ரோபோட்டுக்கள் சமையல் அறையில் இருந்து வாடிக்கையாளர் டேபிளுக்கு வரும் வரை காத்திருப்பார்களா என்று தெரியவில்லை.