கருணாநிதி உடல்நலம் அறிய காவேரி மருத்துவமனைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருகை
வேலுசாமி (Author) Published Date : Jul 28, 2018 10:48 ISTஇந்தியா
முன்னாள் தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்ற கழக தலைவருமான மு கருணாநிதி, நாகப்பட்டினத்தில் திருக்குவளையில் பிறந்தவர். சுதந்திரத்திற்கு முன்பு 1924இல் பிறந்த இவருக்கு தற்போது 94 வயது ஆகிவிட்டது. வயதாகி விட்ட காரணத்தினால் அரசியல் மாநாடு, பத்திரிகையாளர் சந்திப்பு போன்ற எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை.
இவருடைய சார்பில் திமுகவை, அவருடைய மகன் மற்றும் கட்சியின் துணை தலைவரான முக ஸ்டாலின் தான் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களாக கலைஞர் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் குறைந்து மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் தகவல் அறிந்து வந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த செய்தி அறிந்ததும் அவருடைய தொண்டர்கள் மற்றும் பத்திரிகை நிருபர்கள் போன்ற ஏராளமானோர் வீட்டின் முன்பு திரண்டு வந்தனர். இதன் பிறகு ஏராளமான அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அவருடைய தொண்டர்கள் கருணாநிதி நலம் பெற பிரார்த்தனை செய்து வந்தனர். பின்பு ரத்த அழுத்தம் குறைய தொடங்கிய நிலையில் இன்று அதிகாலை மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட அவரை காவேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பின்பு காவேரி மருத்துவமனை சார்பில் கருணாநிதி உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் "ரத்த அழுத்தம் மற்றும் மூச்சு திணறல் காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தமையால் தற்போது ரத்த அழுத்தம் அவருக்கு சீராக உள்ளது. அவருடைய உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்." என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் கருணாநிதியின் உடல் நலம் குறித்து அவ்வப்போது தகவல் வெளியான நிலையில் அவர் இறந்துவிட்டதாகவும் போலியான தகவல்கள் பரவ தொடங்கின. இதனால் தமிழகமே பரப்பாக காணப்பட்டது. அவரை காண நேற்று இரவு முழுவதும் அவருடைய தொண்டர்கள் வீட்டின் முன்பு அவருக்காக காத்திருந்தனர். அவரின் உடல் நலம் சரியாக உள்ளது என்று அறிந்த பிறகு தான் தொண்டர்கள் கலைந்து சென்றனர். தற்போது தமிழக ஆளுநரான பன்வாரிலால் புரோகித் அவர்கள் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து முக ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரிடம் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்து வருகிறார்