தொழிலாளர் தினத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டியவை
வேலுசாமி (Author) Published Date : May 01, 2018 12:26 ISTஇந்தியா
இன்று உலகத்தின் பல்வேறு நாடுகளில் உழைப்பாளர் தினம் சர்வதேச தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் கனடா, அமேரிக்கா போன்ற நாடுகளில் உழைப்பாளர் தினம் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட் கிழமை கொண்டாடப்படுகிறது. முந்தைய காலங்களில் தொழிலாளர்கள் 12-18 மணி நேரம் வரை வேலை செய்யும் கட்டாயத்தில் இருந்தனர். இதனை எதிர்த்து உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட போராட்டத்தின் வெற்றியாக தற்போது 8 மணிநேர தூக்கம், ஒரு நாளில் 8 மணிநேர வேலை, 8 மணிநேர விளையாட்டு போன்றவை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இன்றளவும் ஏதாவது ஒரு பகுதியில் தொழிலாளர்கள் அடிமை மாடுகள் போல் ஒரு நாளில் 15-20 மணிநேரம் வேலை செய்துதான் வருகின்றனர். உலகம் இயங்குவதற்கு முக்கிய காரணம் தொழிலாளர்கள். இத்தகைய தொழிலாளர்களை பணம் என்ற ஒற்றை சொல்லில் அடிமையாகி உள்ளனர். இது தவிர விளையாடி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய குழந்தை பருவத்திலும் முதலாளிகளுக்காக விதிமுறைகளை மீறி வேலை செய்துதான் வருகின்றனர். உலகமே பணம் என்ற ஒற்றை சொல்லில் தான் இயங்கு வருகின்றன.
இந்த பணத்திற்காக தான் தற்போது உலகெங்கும் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த உலகத்தில் வாழும் மனிதர்களுக்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதுவுமே அவனுடையதும் இல்லை. மனிதர்களுக்கு வாழ்வதற்காக அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆதாரம் 'நேரம்' மட்டுமே. இன்றைய தொழிலாளர் தினத்தில் பணத்திற்காக அலையாமல் இருக்கும் குறைந்த நேரத்தில் தேவைக்கேற்றவாறு ஆசைப்பட்டு குடும்பம், சந்தோசம் போன்றவற்றிற்காக வாழ விரும்ப வேண்டும்.
வசதி இல்லாத, சாமானிய, ஏழை மக்கள் கட்டுமான பணிகள், துப்புரவு பணிகள் போன்ற பல துறைகளுக்கு அடிமைகளை போன்று வேலை செய்து தான் வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் ஒரு நாள் கூலி 100 க்கும் குறைவான தொகையே. நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு வளர்ந்து போனாலும், பொது மக்கள் இன்னும் ஆதி காலங்களில் வாழ்வதை போன்று தான் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். நமது நாட்டில் அரசியல் தலைவர்களால் நாடு முன்னேறுகிறது என்று பேச்சுக்காக சொல்லி கொள்ளலாம்.
மேலும் தற்போது ஆனால் நாட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு வேலை சோறு கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. எந்த அரசியல் தலைவர்கள் வந்தாலும் சரி பலர் நடுத்தர மக்களின் மீதும், பணக்கார உயர்தர மக்களின் மீதும் தான் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் நடுத்தர வாழ்க்கை கூட வாழ முடியாத, இருப்பதற்கு நிரந்தர இடமில்லாத, உண்ணும் உணவிற்கு பிச்சை எடுக்கும் மக்களை எவரும் எண்ணுவது கூட இல்லை. எப்போது நாட்டில் ஒரு வேலை சோற்றுக்காக கஷ்டப்படும் மக்களின் எண்ணிக்கை குறைகிறதோ அப்போதே நாட்டின் உண்மையான வளர்ச்சி. இந்த தினத்திலாவது ஒரு வேலை உணவுக்கு கஷ்டப்படும் மக்களுக்கு தங்களால் ஈன்ற அன்னதானங்களை கொடுத்து உதவினால் உங்களுக்கு புண்ணியமாவது வந்தடையும்.
இன்று தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்கள் சந்தோசப்படக்கூடிய விஷயம் ஒன்றுமே நடந்துவிட வில்லை. தொழிலாளர் தினம் என்று நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் வேண்டுமானால் ட்வீட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்ளலாம். ஆனால் உண்மையான தொழிலாளர்கள், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராட்ட களத்தில் தான் உள்ளனர். எப்போது நாட்டில் போராட்ட குரலும், குழந்தை தொழிலாளர்களின் கண்ணீர் குரலும் நீங்குகிறதோ அப்போது தான் உண்மையான தொழிலாளர் தினம்.