ஜனவரி 12 சென்னையில் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி
மோகன்ராஜ் (Author) Published Date : Jan 01, 2018 12:17 ISTபொழுதுபோக்கு
இசை புயல் ஏஆர் ரஹ்மான், ரோஜா படத்தில் ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரையுலகில் பிரபலமாகி, தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழியையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை புகழ் பெற்றவர். ‘ஸ்லம் டாக் மில்லியனைர்’ சிறப்பாக இசையமைத்ததனால் ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவின் பெருமையை சர்வதேச அரங்கில் இவர் நிலைநாட்டினார். இது தவிர இவர் இசைத்துறை சாதனையாளர்களுக்கு அளிக்கப்படும் ‘கிராமி’ விருதை 2 முறையும் , ‘பாஃப்டா’ மற்றும் கோல்டன் குளோப் விருதை 1 முறையும் , ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக்கல்வி மையமான ‘ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து’ வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம் போன்ற 6 கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து இந்தியாவின் பெருநகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானித்துள்ளார். 1992-ம் ஆண்டில் இவர் முதன்முதலாக இசையமைத்த ரோஜா திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்த நிலையில் இசையுலகில் தனது வெள்ளிவிழா ஆண்டை சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்தியாவில் ‘என்க்கோர்’ என்ற இசை சுற்றுப்பயணத்தின் மூலம் சில இசை நிகழ்ச்சிகளை ஏ.ஆர். ரஹ்மான் நடத்தியுள்ளார். அதன் முதல்கட்டமாக, கடந்த 26-ம் தேதி ஐதராபாத் நகரிலும், டிசம்பர் 3-ம் தேதி அகமதாபாத் நகரிலும், டிசம்பர் 17-ம் தேதி மும்பையிலும், டிசம்பர் 23-ம் தேதி டெல்லியிலும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் .
தற்போது இரண்டாவது கட்டமாக வரும் ஜனவரி மாதம் சென்னையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கு அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜனவரி 12-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் ‘நேற்று இன்று நாளை’ என்னும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 25 ஆண்டுகள் சிறப்பாக அமைந்தது. அது ஒரு அழகான பயணம். தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே எனக்கு சிறப்பானவர்கள். அவர்களின் முன் இசை நிகழ்ச்சி நடத்துவதை எனக்கு கிடைத்த கவுரவமாக கருதுகிறேன். இந்த தருணத்தில் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொள்ள கடமை பட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.