குழந்தைகளை சித்ரவதை செய்ததாக 'சங்கு சக்கரம்' படக்குழுவினர் மீது புகார்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 28, 2017 16:15 ISTபொழுதுபோக்கு
புதுமுக இயக்குனர் மாரிசன் இயக்கத்தில் பிரபல லியோ விசன்ஸ், சினிமாவாலா பிக்ச்சர்ஸ், திவ்யா மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கே.சதீஸ், வி.எஸ்.ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'சங்கு சக்கரம்'. இந்த படம் இன்றைய கால குழந்தைகள் ரசிக்கும் விதத்தில் பேய் கலந்த நகைச்சுவை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் லியோ விசன்ஸ் தயாரிப்பு நிறுவனம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற வெற்றி படங்களை தந்துள்ளது.
ரவி கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கீதா, திலீப் சுப்பராயன், மோனிகா, நிகேஷ், ஆதர்ஷ், பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முன்னதாக இந்த படத்தின் டீசர் ட்ரைலர் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் குழந்தைகளை சித்ரவதை செய்து நடிக்க வைத்ததாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலரான செல்வகுமார் என்பவர் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்த புகாரை கொடுத்துள்ளார்.
இந்த புகாரில் 'சங்கு சக்கரம்' படத்தில் குழந்தைகளை கயிற்றில் தொங்கவிட்டும், சாக்கு துணிகளை அணிய வைத்தும் நடிக்க வைத்ததாக இயக்குனர் மாரிசன் தெரிவித்தார். இதன் மூலம் குழந்தைகளை சித்ரவதை செய்தது தெரிகிறது. இந்த படம் வெளியாகும் முன்பு குழந்தைகளை சித்ரவதை செய்யவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே இந்த படத்தை தடை செய்ய வேண்டும். மேலும் இந்த படம் வெளியாகும் முன் தனக்கும் காவல் துறையினருக்கும் இந்த படத்தை போட்டு காட்ட வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.