ஹார்வர்ட் பிசினஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன்
வேலுசாமி (Author) Published Date : Feb 12, 2018 12:41 ISTபொழுதுபோக்கு
நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல் கட்சி தொடங்கும் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக மக்களுக்கு ஆதரவாக தமிழக அரசையும், அரசியலையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி தனது அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டில் இருந்து தொடங்கப்போவதாக முன்னதாக அறிவித்தார். நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சிக்கு மூன்று விதமான பெயர்களை தேர்வு செய்து வைத்துள்ளார்.
இதில் ஒன்றை தேர்வு செய்வது குறித்து ரசிகர்மன்ற நிர்வாகிகளுடனும், நெருக்கமானவர்களுடனும் ஆலோசனை நடத்தியுள்ளார். டெல்லியில் நாளை தேர்தல் கமிஷனில் கமல்ஹாசன் சார்பில் கட்சி பெயரை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது படப்பிடிப்பு பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் அங்கு ஹார்வர்ட் பிசினஸ் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது அவரை செய்தியாளர்கள் பேட்டி எடுத்துள்ளனர். ரஜினியுடன் கூட்டணி சேரும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டதற்கு கமல்ஹாசன் பதில் அளிக்கையில், அரசியலில் ரஜினியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் "ரஜினிகாந்தும் நானும் சிறந்த நண்பர்கள். ஆனால் நட்பு என்பது வேறு. அரசியல் என்பது வேறு. எங்களுடைய கொள்கைகள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது.
ஆனால் நான் சில வழிகள் மூலம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ரஜினிகாந்தின் அறிவிப்புக்காக காத்திருப்போம். நானும் விரைவில் எனது அறிவிப்பை அறிவிக்க உள்ளேன். ரஜினியின் முதல் அறிவிப்பு குறித்து யோசிக்க வேண்டியுள்ளது. ஆனால் அது காவிக்கான அரசியலாக இருக்காது என்று நம்புகிறேன். ரஜினியின் கொள்கை அடிப்படையில் அவருடனான கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.
தற்போதுள்ள சூழலில் தமிழகத்தில் நிதி நிர்வாகம் சரியில்லை. அரசியல் செயல்பாடுகளும் மோசமாக உள்ளன. எந்த காரணத்துக்காகவும் வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது. ஓட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வாங்கினால் அவர்கள் 15 லட்சம் ரூபாயை இழக்க நேரிடும். மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு மோசமாக இருக்கிறது. நான் சைவம் இல்லை. ஆனால் மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன். மாட்டுக்கறி சாப்பிட கூடாது என்று மற்றவர்களை சொல்ல மாட்டேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து தனித்து போட்டியிடும் போது தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ரஜினியுடன் கூட்டணி வைப்பீர்களா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ‘‘மக்களின் தீர்ப்பை மதிப்பேன்’’ என்று பதிலளித்துள்ளார்.
அதன் பிறகு ஹார்வர்ட் பிசினஸ் பள்ளி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கூறியதாவது, "இந்த வருடத்திலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கும் நான் கிராமங்களில் இருந்து மாற்றத்தை தொடங்குகிறேன். இந்த மாற்றத்திற்கு அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன். நான் தத்தெடுக்கும் கிராமங்களை முன்னோடி கிராமங்களாக மாற்ற முடிவு செய்துள்ளேன். திட்டங்களை அமல்படுத்துவதில் குறைகள் உள்ளது. ஓட்டுக்கு மக்கள் பணம் வாங்கினால் நமது பாக்கெட்டில் இருந்து அரசியல்வாதிகள் பணத்தை எடுக்கும் போது நாம் ஏன் என்று கூட கேள்வி கேட்க முடியாது. பெரியார், காந்தி ஆகியோரின் அரசியலுக்கு நான் செல்லவில்லை.
ஆனால் அவர்கள் மக்களுக்காக மட்டுமே போராடினார்கள். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து பணியாற்ற திட்டமிட்டுள்ளேன். எனது அரசியல் பயணத்தில் பெரியார், காந்தி ஆகியோர் எனது முன்னோடிகள். நான் மாறுபட்டவன் என்று கூறவில்லை. அரசியலில் மாறுபட்டவனாக இருக்க விரும்புகிறேன். எனது நோக்கமும், ரஜினியின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டுமே" என்று அவர் தெரிவித்தார்.