தமிழ் படம் 2.0 மூலம் வில்லன் அவதாரம் எடுத்துள்ள சதிஷ்
வேலுசாமி (Author) Published Date : May 26, 2018 15:33 ISTபொழுதுபோக்கு
நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சந்தானம் ஆகியோருக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களாக சூரி, யோகி பாபு, சதிஷ் ஆகியோர் விளங்கி வருகின்றனர். இதில் நடிகர் சதீஷின் யதார்த்தமான காமெடி வசனங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் 2010இல் 'தமிழ் படம்' மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர். இந்த படத்திற்கு பிறகு 8 வருடங்களில் 30 படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் பக்கா படத்திற்கு பிறகு கஜினிகாந்த், தமிழ் படம் 2.0, பிஸ்தா, மிஸ்டர் சந்திரமௌலி, 100% காதல், 4G, கொரில்லா, பூமராங், வா டீல், சீம ராஜா உள்ளிட்ட 10 படங்கள் உருவாகி வருகிறது.
தற்போது பூமராங் மற்றும் தமிழ் படம் 2.0 படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பின் போது பேசிய அவர் "என்னுடைய முதல் படம் 'தமிழ் படம்'. தற்போது உருவாகி வரும் தமிழ் படம் 2.0 முந்தைய பாகத்தை விட ரசிகர்களுக்கு பல மடங்கு சிரிப்பூட்டும் விதமாக இருக்கும். இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறேன். இந்த படத்தில் நான் சீரியஸாக பேசும் வசனங்களும் ரசிகர்களுக்கு சிரிப்பூட்டும் விதமாக தான் இருக்கும். இந்த படத்தின் மூலம் சிவாவுக்கு நல்ல வரவேற்புகள் இருக்கும்.
நான் ஹீரோவாக எப்போதும் நினைத்ததில்லை. அந்த கஷ்டத்தை நிச்சயம் மக்களுக்கு கொடுக்க விரும்ப மாட்டேன். ரசிகர்கள் சந்தானத்தை ஹீரோவாக ஏற்று கொண்டனர். அவர் ஹீரோவாக நடிப்பதற்கு உரிய தகுதிகளை வளர்த்து நடனம் கற்று, உடல் எடையை குறைத்து தற்போது ஹீரோவாகி உள்ளார். எனக்கு அந்த தைரியம் சாத்தியமாக கிடையாது. நான் அடுத்ததாக இயக்குனர் ராஜேஷ் படத்தில் நடிக்க உள்ளேன். ராஜேஷ் படங்களில் ஒன்றும் அவ்வளவாக கஷ்டப்பட வேண்டியதில்லை.
அவர் என்ன சொல்கிறாரோ அதை செய்தாலே போதும். தற்போது வீட்டில் எனக்கு பெண் பார்த்து வருகின்றனர். விரைவில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். இயக்குனர் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் வெளியான முந்தைய பாகத்தில் பறவை முனியம்மா வில்லன் கதாபத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு தற்போது இரண்டாம் பாகத்தில் நடிகர் சதிஷ் வில்லன் கதாபத்திரத்தில் நடிப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.