உயர்ந்த மனிதனாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி தரும் அமிதாப் பச்சன்
புருசோத்தமன் (Author) Published Date : Aug 31, 2018 11:21 ISTபொழுதுபோக்கு
இந்திய திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் அமிதாப் பச்சன், கடந்த 1969ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 50 வருடங்களாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 50 வருடங்களில் இவர் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் தொகுப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டுள்ள இவருக்கு 75 வயதாகி விட்டது. ஆனாலும் தொடர்ந்து திரைத்துறையில் நடித்து வருகிறார்.
இவர் தற்போது 102 நாட் அவுட் படத்திற்கு பிறகு தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் மற்றும் சயிரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்களில் நடித்து வருகிறார். 75 வயதாகியும் பாலிவுட்டை கலக்கி வரும் அமிதாப் பச்சன் தற்போது தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார். நடிகர் மற்றும் இயக்குனரான எஸ்ஜே சூர்யா மற்றும் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இந்த படத்தினை இயக்குனர் தமிழ்வாணன் இயக்க உள்ளார்.
இவர் முன்னதாக எஸ்ஜே சூர்யாவின் கள்வனின் காதலி, மச்சக்காரன், நந்தி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் எஸ்ஜே சூர்யாவுடன் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு 'உயர்ந்த மனிதன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் சுரேஷ் என்பவர் இந்த படத்தினை தயாரிக்கிறார். தமிழ்வாணன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் துவங்க உள்ளது. அமிதாப் பச்சனின் முதல் தமிழ் படம் என்பதால் அவருடைய ரசிகர்கள் இந்த படத்திற்காக ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.