சிம்புவின் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புருசோத்தமன் (Author) Published Date : Oct 10, 2018 05:30 ISTபொழுதுபோக்கு
நடிகர் மற்றும் பாடகரான சிம்புவிற்கு தற்போது தான் பட வாய்ப்புகள் அதிகரித்து கொண்டு வருகின்றது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'செக்க சிவந்த வானம்' படத்தின் மூலம் சிம்பு மீண்டும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் பலத்த ஆதரவை பெற்றுள்ளார். இந்த படத்தினால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. 'செக்க சிவந்த வானம்' படத்திற்கு பிறகு சிம்பு, இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 'அட்டரண்ட்டிகி தெரடி' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பும் ஜியார்ஜியாவில் துவங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டில் சிம்பு, 'அரசன்' படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்காக அவரிடம் பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் 50 லட்சம் ரூபாயை முன்பணமாக அளித்துள்ளது. ஆனால் இதுவரையிலும் இந்த படத்திற்காக அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை.இதனால் அவர் வாங்கிய 50 லட்சத்தை வட்டியும் முதலுமாக தரக்கோரி பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடர்ந்தனர்.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிம்பு பணத்தை திருப்பி தர உத்திரவாதம் அளிக்க வேண்டும் இல்லையென்றால் அவருடைய கார் மற்றும் செல்போன் போன்ற உபகரணங்களை ஜப்தி செய்யப்படும் என்று சிம்புவிற்கு நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர் இதற்கு பதிலளிக்கவில்லை. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், வரும் அக்டொபர் 31ஆம் தேதிக்குள் சிம்பு வாங்கிய பணத்திற்கு வட்டியும் முதலுமாக பணத்தை திருப்பி தர உத்திரவாதம் அளிக்க வேண்டும் இல்லையேல் அவருடைய வீடு மற்றும் உபயோக பொருட்கள் அனைத்தும் ஜப்தி செய்யப்படும் என்று மீண்டும் அவரை உயர்நீதி மன்றம் எச்சரித்துள்ளது.