வைகை புயல் வடிவேலுவின் 30 வருட திரையுலக பயணம்
வேலுசாமி (Author) Published Date : Feb 05, 2018 14:36 ISTபொழுதுபோக்கு
நடிகர் மற்றும் பாடகரான வைகை புயல் வடிவேலு, தனது அசாத்தியமான திறமையாலும், நடிப்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைத்த புல்லட் பாண்டி, சுனா பானா. எவ்வளவு தான் துக்கம் சோகம் வந்தாலும் இவருடைய காமெடியை பார்த்தாலே போதும் தன்னை மறந்து சிரித்து விடுவார்கள். தற்போது அவர் நடிப்பில் இடைவெளி இருந்தாலும் ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களுக்கும், நெட்டிசன்களுக்கும் அவரே குரு. அப்படிப்பட்ட இவர் தனது திரையுலக பயணத்தை 1991-ஆம் ஆண்டு 'என் ராசாவின் மனசிலே' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் தனது சிறப்பான நகைச்சுவை நடிப்பிற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதினை ஐந்து முறை, காலம் மாறிப்போச்சு (1996), வெற்றிக் கொடி கட்டு (2000), தவசி (2001), இம்சை அரசன் 23ம் புலிகேசி (2006), காத்தவராயன் (2008) போன்ற படங்களுக்காகவும், சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதை 2005-ம் ஆண்டில் வெளியான 'சந்திரமுகி' திரைப்படத்திற்காகவும் வென்றுள்ளார். மேலும் ‘மருதமலை’, ‘ஆதவன்’ போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருதினை’ வென்றுள்ளார். இவருக்கு பள்ளியில் படித்த அனுபவம் என்பது இவருக்கு கிடையாது.
நண்பர்களுடன் இணைந்து சிறு நாடகங்களை மட்டும் மேடையில் அரங்கேற்றியுள்ளார். அந்த நாடகங்களில் நகைச்சுவை கதாநாயகனாக நடித்தார். இவருடைய தந்தை இறந்து விடவே குடும்பம் மிகவும் வறுமைக்குள்ளானது. மதுரையில் உள்ள புகைப்படங்களுக்கு கண்ணாடி பிரேம்கள் செய்யும் ஒரு சிறிய கடையில் வேலை செய்து வந்தார். அந்தத் தருணத்தில் நடிகர் ராஜ்கிரண் ஒருமுறை அவருடைய ஊருக்குச் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக அவருடைய அறிமுகம் கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் சென்னைக்கு வந்து சேர்ந்த வடிவேலு, ராஜ்கிரணின் அலுவலகம் மற்றும் வீடு என அவருக்குத் தேவையான எல்லா வேலைகளையும் பார்த்து வந்தார்.
ராஜ்கிரண், தான் நடித்த 'என் ராசாவின் மனசிலே' திரைப்படத்தில் வடிவேலுவை முதன்முதலாக திரையில் அறிமுகப்படுத்தினார். வைகை புயல் இதுவரை ஏராளாமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்தவர். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே அழியா புகழ் பெற்றவை.
இவரது நகைச்சுவை காட்சிகளில் பெரும்பாலும் வீண்வம்பு இழுத்து அடிவாங்குபவராகவும், யாரேனும் தவறு செய்பவர்களை தட்டிக்கேட்டு அதன்மூலமாக அடிவாங்குபவராகவும், கைதேர்ந்த திருடனாகவும், மக்களின் அறியாமை மற்றும் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றுபவராகவும் தோன்றுவார். அப்படி இவர் அடிவாங்கியும், வசனத்தினாலும் மக்களின் சிரிப்பு மட்டும் இல்லாமல் மக்களின் அறியாமையை வெளிக்கொணரும். தற்போது இவர் 200 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இறுதியாக இவருடைய நடிப்பில் 'மெர்சல்' படம் வெளியானது.