இம்சை அரசன் 2 பிரச்சனை முடிவடையாததால் அடுத்த படத்தை துவங்கிய சிம்புதேவன்
வேலுசாமி (Author) Published Date : Sep 25, 2018 15:36 ISTபொழுதுபோக்கு
தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகரான சேரனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தின் மூலம் இயக்குனராக என்ட்ரி கொடுத்தவர் சிம்புதேவன். கடந்த 2006ல் வெளியான இந்த படம் வைகைபுயலின் நடிப்பில் ரசிகர்களின் பேராதரவை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், புலி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இந்த படங்களுக்கு பிறகு 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து அதற்கான பணிகளையும் துவங்கினார். இயக்குனர் சங்கர் தயாரிப்பில் உருவாகி வந்த இந்த படம் வடிவேலுவின் பிரச்சனையால் தொடர்ந்து தாமதமாகி கொண்டே செல்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக இது வரை 9கோடி வரை இழந்துள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த படத்தை நடித்து கொடுக்க வேண்டும் அல்லது 9கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்று வடிவேலுவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படி இந்த படத்தின் பிரச்சனைகள் நீண்ட வருடங்களாக நீடித்து கொண்டே செல்வதால் இயக்குனர் சிம்புதேவன், சலித்து போன பிறகு அடுத்த படத்திற்கான வேலைகளை துவங்கியுள்ளார்.
இவருடைய அடுத்த படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக உள்ளதாம், அதாவது இந்த படத்தில் 6 முக்கிய கதாபாத்திரங்கள், அவர்களை நோக்கிய கதை. இந்த படத்தினை நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான வெங்கட் பிரபு தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் வெங்கட் பிரபுவின் கூட்டணி நடிகர்களான ஜெய், வைபவ், பிரேம்ஜி, சிவா போன்ற நடிகர்கள் 6 முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதத்தில் துவங்கஉள்ளனர்.