சாய் பல்லவியின் முதல் தமிழ் படத்திற்கு வந்த மற்றொரு சோதனை
வேலுசாமி (Author) Published Date : Apr 30, 2018 12:49 ISTபொழுதுபோக்கு
தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்த கோயம்புத்தூரை சேர்ந்த நடிகை சாய் பல்லவி தற்போது தமிழில் அறிமுகமாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் 'தியா'. சாய் பல்லவியின் முதல் தமிழ் படமான இந்த படத்தை இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழில் 'தியா' என்ற தலைப்பிலும், தெலுங்கில் 'கணம்' என்ற தலைப்பிலும் வெளியாகியுள்ளது. தமிழில் முதலில் 'கரு' என்ற தலைப்பில் வெளியாக இருந்த இந்த படம் கேஎஸ் ஸ்க்ரீன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் 'கரு' என்ற தலைப்பை பதிவு செய்து அதன் உரிமையை வைத்திருந்தது.
இதனால் இந்த படத்திற்கு 'தியா' என்ற தலைப்பு மாற்றப்பட்டு வெளியானது. லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் மீது மீண்டும் ஒரு புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை இயக்குனர் சந்திர குமார் என்பவர் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து அவர் கூறுகையில் "நான், நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜகுமாரனுடன் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளேன். நான் கடந்த 2015-ஆம் ஆண்டில் கருக்கலைப்பு என்பது பாவச்செயல் என்ற நோக்குடன் ஒரு கதையை உருவாகியிருந்தேன்.
எனது நண்பர் ஒருவர் உதவியால் இந்த படத்தின் கதையை இலங்கையை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரிடம் தெரிவித்தேன். இந்த படத்தை தயாரிப்பதற்கு அவரும் சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த படத்தில் நடிக்க இயக்குனர் ராஜகுமாரன் சம்மதம் தெரிவித்திருந்தார். அட்வான்ஸ் வாங்குவதற்காக காத்திருக்கும் நேரத்தில் இந்த படத்தை கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தேன். என்னுடைய கதையை போலவே இந்த படத்தின் விமர்சனங்களை நாளிதழ்களில் எழுதியிருந்தனர். இதனை கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் இந்த படத்தை திரையரங்கிற்கு சென்று பார்த்ததும் என்னை அதிர்ச்சிக்கு தள்ளி விட்டது.
இந்த படம் அப்படியே என்னுடைய கதை. சிறு மாற்றங்களை மட்டும் செய்து 'தியா' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் தன்னை கருவிலே கொன்றவர்களை பழிவாங்கும் ஒரு குழந்தை, உறவினர் முதல் அனைவரும் என்னுடைய கதாபத்திரத்தில் வந்தவர்கள். இந்த படத்தின் கதையை பற்றி பலரிடம் தெரிவித்துள்ளேன். தற்போது அது பரவி படமாக வந்துள்ளது.
இந்த படம் என்னுடைய படம் என்று நிரூபிக்க என்னிடம் நண்பர்கள் மற்றும் இந்த படம் குறித்து நாங்கள் பேசிய வாக்குமூலங்கள் என அனைத்தும் உள்ளன. இயக்குனர் விஜய்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பல நபர்களிடமிருந்து இந்த படம் இயக்குனர் விஜய்க்கு சென்றிருக்கலாம். ஆனால் அதற்காக இந்த படத்தின் உரிமையை என்னால் விட முடியாது. எனக்கு எதுவும் வேண்டாம், இந்த படம் என்னுடைய கதை என்று இந்த உலகத்திற்கு தெரிந்தால் போதும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.