லக்னோவில் ரஜினியின் பேட்ட படப்பிடிப்பிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
வேலுசாமி (Author) Published Date : Sep 10, 2018 10:01 ISTபொழுதுபோக்கு
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு 'பேட்ட' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியான இரண்டு நாட்களிலே 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த மோஷன் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கட்டிடம் டேராடூனில் எடுக்கப்பட்டது. டேராடூனில் சில காட்சிகளின் படப்பிடிப்பும் நடந்து வந்தது.
முன்னதாக ரஜினி சம்பந்தப்பட்ட முதற்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங், டேராடூன் மற்றும் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இதன் பிறகு தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை உத்திர பிரதேச தலைநகரமான லக்னோவில் நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக சென்னையில் இருந்து லக்னோவுக்கு ரஜினி புறப்பட்டு சென்றார். அவருடைய பாதுகாப்பிற்காக 40க்கும் அதிகமான பாதுகாவலர்களும் லக்னோவுக்கு புறப்பட்டனர்.
லக்னோ வந்தடைந்த ரஜினியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. ரசிகர்களுக்கு மத்தியில் சிக்கி கொண்ட அவரை பாதுகாவலர்கள் பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர். இதன் பிறகு தற்போது லக்னோவில் பேட்ட படப்பிடிப்பு சுமார் 500க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்களுடன் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு லக்னோவில் உள்ள சவுக், மகினாபாத், சீதாபூர், பராபாஸ்கி போன்ற இடங்களிலும் நடக்க உள்ளது.
இந்த மாதம் வரையிலும் லக்னோவில் படப்பிடிப்பை தொடர உள்ளனர். இதனை தொடர்ந்து வாரணாசி, சன்பாந்தரா போன்ற இடங்களில் படப்பிடிப்பை நிகழ்த்த உள்ளனர். மேலும் லக்னோவில் ரஜினி வந்தடைந்த தகவல் அறிந்து ஏராளமான ரசிகர்கள் அவரை காண படப்பிடிப்பிற்கு திரண்டுள்ளனர். இதனால் அவருடைய பாதுகாப்பிற்காகவும், படப்பிடிப்பு பாதிப்படையாத வகையிலும் லக்னோ உயர் அதிகாரிகள் 25 காவல் அதிகாரிகளை படப்பிடிப்பு தலத்தில் நியமித்துள்ளார்.
இது தவிர படப்பிடிப்பு தலத்தில் புகைப்படங்கள் எடுக்காமல் இருக்கவும் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட் போன்களுக்கும் படப்பிடிப்பு தலத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் படப்பிடிப்பில் ரஜினியின் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டு தான் இருக்கின்றன.