ஜூன் 22இல் தன்னுடைய நீண்ட நாள் மவுனத்தை கலைக்கிறார் ஜோசப் விஜய்
வேலுசாமி (Author) Published Date : Apr 26, 2018 10:14 ISTபொழுதுபோக்கு
ஒவ்வொரு ஆண்டும் விஜய் ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளான ஜூன் 22-இல் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்நாளில் விஜயின் படங்கள் திரையரங்குகளில் ரசிகர்களுக்காக திரையிடப்படும். சமீப காலமாக விஜய் அரசியலில் இறங்கப்போவதாக விஜய் ரசிகர்களிடம் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இதற்கு சான்றாக தற்போது மதுரையில் 'தின விஜய்' என்ற பத்திரிகையில் "ஜூன் 22இல் முக்கிய முடிவு எடுக்கப்போகிறார் ஜோசப் விஜய், தன் நீண்ட நாள் மௌனத்தை கலைகிறார், தமிழகமெங்கும் ரசிகர்கள் உற்சாகம்" என்ற தலைப்பு செய்தியாக அச்சிட்டுள்ளனர்.
இந்த செய்தியானது மதுரை வடக்கு மாவட்ட ரசிகர்கள் சார்பில் அச்சிடப்பட்டுள்ளது. சினிமா துறையில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு, அவருடைய ரசிகர்கள் சினிமா துறையில் மட்டுமல்லாமல் நிஜ உலகிலும் அவர்களுடைய மனதில் கோவில் கட்டி வைத்துள்ளனர். அவ்வப்போது சமூக நலன் கருதி சிறு சிறு உதவிகள் செய்து வரும் விஜய், அரசியலில் களமிறங்கி அதில் படிந்துள்ள கறைகளை நீக்க வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை.
இவர்களின் ஆசையானது 'மெர்சல்' படத்திற்கு பிறகு பல மடங்கு அதிகரித்துள்ளது. இது குறித்து விஜயின் அப்பாவான சந்திரசேகர் அவர்கள், விஜய் அரசியலுக்கு வருவது என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு. அவருக்கு அரசியலில் வர வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால் தற்போதைய சூழலில் அவர் அரசியலில் இறங்கி கட்சி ஆரம்பித்தால் மக்களுக்கு போரடித்துவிடும் என்று தெரிவித்துள்ளார். அது உண்மை தான். தற்போது தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மல மலவென குவிந்து வருகின்றன.
தற்போது நடிகர் கமல் ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை துவங்கியுள்ளார். இவருக்கு பிறகு விரைவில் ரஜினிகாந்தும் அரசியல் கட்சி ஒன்றை துவங்கவுள்ளார். இவர்களை தொடர்ந்து நடிகர் விஜயும் அரசியலில் நுழைய வேண்டும் என்று ரசிகர்கள் ஆசை படுகின்றனர். இந்நிலையில் ஜூன் 22 விஜயின் 44வது பிறந்த நாள் விழா, ஆனால் இந்த ஆண்டு விஜய் பிறந்த நாளில் அவர் அரசியல் குறித்து ஏதாவது முடிவு எடுப்பாரா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.