இந்தியன் 2வை தொடர்ந்து தேவர் மகன் 2 கன்பார்ம்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Sep 26, 2018 15:13 ISTபொழுதுபோக்கு
நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கமல் ஹாசன் நடிப்பில் இறுதியாக 'விஸ்வரூபம் 2' வெளியானது. முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகத்திற்கு அதிக வரவேற்புகள் கிடைக்க வில்லை. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கருடன் இணைந்து 'இந்தியன் 2' படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான லொகேஷன் தேடும் பணிகளை சமீபத்தில் இயக்குனர் சங்கர் முடித்துள்ளார். இதன் பிறகு விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை துவங்கவுள்ளனர்.
தற்போது கமல் ஹாசன் 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவடையவுள்ளது. இதனை அடுத்து 'இந்தியன் 2' படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடக்க உள்ளது. இந்த படத்திற்கு பிறகு கமல் ஹாசன் 'தேவர் மகன்' இரண்டாம் பாகத்தை இயக்கி நடிக்க உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் கடந்த 1992இல் வெளியான 'தேவர் மகன்' இரண்டாம் பாகத்தினை எடுக்க கமல் ஹாசன் முடிவு செய்துள்ளார். கமல் ஹாசன், சிவாஜி, ரேவதி, நாசர், கவுதமி ஆகியோரது நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஒரு நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் தலைவராகவும் மக்கள் நீதி மய்யத்தினை வழிநடத்தி வருகிறார். இதனால் வருகின்ற தேர்தலுக்குல் இந்தியன் 2 மற்றும் தேவர் மகன் 2 படங்களை முடிக்க கமல் ஹாசன் ஆர்வமுடன் களமிறங்கியுள்ளார்.